ஒரு பன்றி வியாபாரி தன் மகனிடம், சந்தையில் போய் பன்றிக்குட்டி வாங்கி வரச் சொன்னார். பையனும் வாங்கி வந்தான். வரும் வழியில் சிறுவர்கள் விளையாடி கொண்டிருக்கவே, பன்றி வாங்கி வந்த பையை, கீழே வைத்து விட்டு வேடிக்கை பார்த்தான். ஒரு குறும்புப்பயல் அந்தப் பன்றி குட்டியை வெளியே எடுத்து விட்டு, ஒரு நாய்க் குட்டியை போட்டு விட்டான். சிறுவன் வீடு வந்து தந்தையிடம் பையைக் கொடுத்தான். பிறகென்ன... பையனுக்கு உதை விழுந்தது. திரும்பவும் போய் பன்றிக்குட்டி வாங்கி வரும்படி தந்தை சொல்லி விட்டார். திரும்பிச்செல்லும் வழியில் அதே விளையாட்டு நடக்கவே, பையன் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
குறும்புப்பயல், இப்போது பன்றியை பையில் போட்டு விட்டு, நாயை வெளியே விட்டான். இதைக் கவனிக்காமல், பன்றி வியாபாரியிடம் சிறுவன் புகார் சொல்ல, வியாபாரி பையை பிரித்துப் பார்த்தார். உள்ளே பன்றிக்குட்டி இருந்தது. அவர் நான்கு உதை கொடுத்து அனுப்பி விட்டார். சிறுவன் பையை எடுத்து கொண்டு வரும் போது, திரும்பவும் இதே போல் வேடிக்கை பார்க்க குறும்பு பயல் இம்முறையும் தன் வேலையைக் காட்டிவிட்டான். கவனிக்காத சிறுவன், திரும்பவும் அப்பாவிடம் போய் அடி வாங்கினான். கொடுத்த வேலையை சரி வர செய்யாதவர்கள் இப்படிதான் அலைக்கழிக்கப்படுவர். “ தன் வேலையில் ஜாக்கிரதையாய் இருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களின் முன் நிற்பான்” என்கிறது பைபிள். வேலையை கலை போல் ரசித்து செய்ய வேண்டும். வேலையில் கவனமாக இருப்பவர்களுக்கு தண்டனை கிடைக்காது. அவர்கள் கவுரவிக்கப்படுவர்.