பதிவு செய்த நாள்
04
ஜன
2018
02:01
ப.வேலூர்: தைப்பூச திருவிழாவின்போது, பாலசுப்பிரமணியசாமி கோவிலில், அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை எழுந்துள்ளது. ப.வேலூர் அடுத்த, கபிலர்மலையில் பாலசுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இங்கு நடக்கும் தைப்பூச திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். பக்தர்களிடம் நுழைவுக்கட்டணம், வாகன நிறுத்துமிடம், சிறிய மற்றும் பெரிய உணவகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் போன்ற வர்த்தகர்களிடமிருந்து வரி, வாடகை என பல லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனாலும், பக்தர்களின் அடிப்படை தேவைகள் குறித்து, இதுவரை எந்த துறையினரும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொண்டதில்லை. குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகளின்றி, பக்தர்கள் அல்லாடி வருகின்றனர். இந்தாண்டு திருவிழா, ஜன., 31ல் நடக்கிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பக்தர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முன்வர வேண்டும்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: அத்தியாவசிய தேவையான கழிப்பிடம் இல்லாததால், பக்தர்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். உள்ளூர்வாசிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். சுகாதார சீர்கேடு உருவாகும் சூழல் உள்ளது. திருவிழாவுக்கு முன்னதாகவே, கபிலர்மலையின் நான்கு புறங்களில், தற்காலிக கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தி, தண்ணீர் வசதியும் செய்து தரப்பட வேண்டும். மேலும், குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.