பதிவு செய்த நாள்
20
டிச
2011
11:12
உடல், பொருள், ஆவி அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணித்தவர் புனித அருளானந்தர். போர்ச்சுக்கல் நாட்டின் ராணுவத்தில் இடம்பெற்றிருந்த வீரர்களை வழிநடத்தி செல்லும் பொறுப்பினை ஏற்றிருந்த ஒருவரின் மகனே புனித அருளானந்தர். இயற்பெயர் ஜோன். இவரது தந்தை வீரத்தையும், விசுவாசத்தையும் மகனின் மனதில் ஆழமாக விதைத்தார். இளமையிலேயே தந்தையை இழந்த இவர், தாயின் அரவணைப்பில் பள்ளி பருவத்தை முடித்து அவரின் ஆசியுடன் குருகுலத்தில் சேர்ந்தார். இயேசுவிற்காக சிலுவை சாவினை ஏற்றுக்கொண்ட எண்ணற்ற இறைவாக்கினர்களின் மனோதிடம் ஜோனின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியது. அவர்களைப்போன்று தானும் வேதசாட்சியாக மாறவேண்டுமென்று ஆசைப்பட்டு கோவா வந்தடைந்தார்.
தமிழகத்தில் தங்கியிருந்து இறைப்பணி செய்யுமாறு இயேசு சபையினர் இவரைக் கேட்டுக்கொண்டனர். தமிழ் படித்த ஜோன், தன் பெயரை "அருளானந்தர் என மாற்றிக்கொண்டு அருட்சேவைகளை குறைவின்றி செய்தார். நோயினால் அவதிப்பட்ட சிற்றரசன் தடியத்தேவன், அதிலிருந்து தன்னை விடுவிக்குமாறு அருளானந்தரிடம் வேண்டுதல் விடுத்தார். இயேசுவின் பெயரால் அவனை குணமாக்கிய அருளானந்தர், மனந்திருந்தி இறைவனுக்கு ஏற்புடையவராக வாழுமாறு அறிவுறுத்தினார். சிற்றின்ப வேட்கையில் திளைத்திருந்த தடியத்தேவன், அருளானந்தரின் அருளுரையை ஏற்று முதல் மனைவியை தவிர மற்றவர்களை விலக்கினான். இதில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருத்தி, மன்னர் சேதுபதி ராயனின் தங்கை மகள். ஆத்திரமடைந்த அவள், அருளானந்தரை பழிவாங்குமாறு தனது மாமனிடம் பரிந்துரைத்தாள். தடியத்தேவனுக்கு தெரியாமல் அருளானந்தரை தீர்த்துக்கட்டுமாறு ஓரியூரில் ஆளுனர் பதவியில் இருந்த தனது சகோதரன் உதயத்தேவனுக்கு ஓலை அனுப்பினார் சேதுபதி. அன்றைய காலை திருப்பலியை நிறைவேற்றிவிட்டு காவலர்களை எதிர்பார்த்து காத்திருந்த அருளானந்தர், எந்த எதிர்ப்பும் காட்டாது உடன் சென்றார். முழந்தாளிட்டு ஜெபித்தவாறு தலை குனிந்த அருளானந்தரின் கழுத்தில் அரிவாள் பதிந்தது. தலை துண்டிக்கப்பட்டு தனியாக விழுந்த உடலில் இருந்து வெளியேறிய ரத்தத்தால் மண் சிவந்தது. அன்றிலிருந்து இன்றுவரை சிவந்த மண்ணாகவே ஓரியூர் காட்சிஅளிக்கிறது.தூய ஆவியின் துணையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், புனித அருளானந்தரின் அருட்பணிகளை மனதிற்கொண்டு வீண் பெருமையை தேடாமலும், ஒருவருக்கு ஒருவர் எரிச்சல் ஊட்டாமலும், ஒருவர் மீது ஒருவர் பொறாமைப்படாமலும் வாழ்வோம்.