பதிவு செய்த நாள்
20
டிச
2011
12:12
தூத்துக்குடி: சபரிமலை செல்லமுடியாமல் பாதியில் திரும்பிய பக்தர்கள், கோவில்பட்டியிலுள்ள நாற்கரசாலை அய்யப்பன் கோயிலில் இருமுடியுடன்18 படியேறி சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்து வழிபட்டனர். முல்லைபெரியாறு அணை பிரச்னை காரணமாக, குமுளி வழியாக அய்யப்ப பக்தர்கள் சபரிமலை செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அடுத்த புளியறை வழியாக சபரிமலைக்கு சென்றுவருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் தேனி, கம்பத்தைச்சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 93 பேர் இருமுடிகட்டி, மூன்று வாகனங்களில் புளியறை வழியாக சபரிமலை சென்றனர். கேரள எல்லையில் நுழைந்ததும் பிரச்னை ஏற்பட்டதால் அவர்கள் சபரிமலை செல்லாமல், அங்கிருந்து ஊர்திரும்பிக் கொண்டிருந்தனர்.
நாற்கர சாலை அய்யப்பன்: நெல்லை - மதுரை நான்குவழிச்சாலையில், கோவில்பட்டி அருகே சாத்தூர் செல்லும் வழியில் ஆறு மாதத்திற்கு முன் புதிதாக கட்டப்பட்ட நாற்கர சாலை அய்யப்பன் கோயிலை அவர்கள் கண்டனர். உடனடியாக அங்கு வாகனங்களை நிறுத்திய அந்த பக்தர்கள், விடலைத்தேங்காய்உடைத்து இருமுடியுடன் அக்கோயிலின் 18 படிகளில் ஏறி நெய் அபிஷேகம் செய்து அய்யப்பனை தரிசித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். சபரிமலைக்கு செல்லமுடியவில்லையே என்ற மனவேதனை தங்களுக்கு இருந்தது. அதனை, இக்கோயிலுள்ள அய்யப்பன் தீர்த்து வைத்தார் என அவர்கள் மனநிறைவுடன் தெரிவித்தனர். கோயில் நிர்வாகத்தினர் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தனர். இதுபோல, சபரிமலை செல்ல முடியாத ஏராளமானோர் இக்கோயிலுக்கு இருமுடிகட்டிவந்து அய்யப்பனை வழிபடுகின்றனர்.