பதிவு செய்த நாள்
20
டிச
2011
12:12
நகரி : திருமலையில், புதுமண தம்பதிகளுக்காக, திருமணப் பதிவு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. திருமலையில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணப் பதிவு அலுவலகத்தை, மாநில பத்திரப் பதிவு அமைச்சர் நரசிம்மன், நேற்று முன்தினம் திறந்து வைத்தார். திருமலையில் திருமணம் செய்து கொண்ட மண மக்கள் சிலர், பதிவு அலுவலகத்திற்கு வந்திருந்து, தங்களின் திருமணத்தை, நேற்று பதிவு செய்து கொண்டனர். பதிவு அலுவலகத்தை திறந்து வைத்து, அமைச்சர் கூறியதாவது: திருமலையில், ஓராண்டில், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணப் பதிவை, சட்டப்படி கட்டாயமாக பதிவு செய்ய, 008ம் ஆண்டில், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வெளிநாடுகளில் வாழும், இளம் வயது ஆண், பெண் இருவரும் திருமணம் செய்து கொண்டால், அந்த திருமணம் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. புதிதாக திருமணம் செய்து கொள்ளும் புது மணமக்கள், ஓரிரு தினங்கள் முன்பாக, தகவல் தெரிவிக்க வேண்டும். பின், திருமணம் முடிந்த பின், பதிவு செய்து கொள்ளலாம். புதுமண மக்கள், தங்களின் திருமண அழைப்பிதழ், திருமணப் புகைப்படம் போன்ற, அத்தாட்சிகளை பத்திரப் பதிவு அலுவலகத்தில் அளித்து, பெற்றோர் அல்லது மூன்று பேரை சாட்சிகளாக காண்பித்து, 10 ரூபாய் கட்டணம் செலுத்தி, திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம். ஆன்-லைன் மூலம் பதிவு செய்யும் வசதி, முதல் கட்டமாக விசாகப்பட்டினத்தில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அமைச்சர் நரசிம்மன் கூறினார்.