பதிவு செய்த நாள்
06
ஜன
2018
12:01
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே செம்பிலான்குடி கிராமத்தில், 11 ம் நுாற்றாண்டை சேர்ந்த, தன் தலையை வெட்டி, மன்னருக்கு காணிக்கையாக கொடுக்கும் வீரனின் நவகண்ட சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தொல்லியல் நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, ஒருங்கிணைப்பாளர் மோ.விமல்ராஜ் ஆகியோர் திருவாடானை பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். சூரம்புலி அருகே செம்பிலான்குடியில், தன் தலையை தானே வெட்டி மன்னர் , தலைவருக்கு காணிக்கையாக செலுத்தும் நவ கண்ட சிற்பம் சிவன் கோயில் அருகே கண்டுபிடித்துள்ளனர்.
வே.ராஜகுரு தெரிவித்ததாவது: வீரர்கள் போரில் மன்னருக்கு வெற்றி கிடைக்கவும், தனது தலைவன் உடல் நலம் பெறவும், ஊரின் நன்மைக்காகவும் காளி, கொற்றவை தெய்வங்களை வேண்டிக் கொண்டு, தங்களது தலையை வாளால் வெட்டிக்கொண்டு, உயிரை கொடுத்து தெய்வங்களுக்கு காணிக்கையாக செலுத்தும் பழக்கம் இருந்தது. இதனை கல்வெட்டுக்கள் துாங்கு தலை குடுத்தல் என்கின்றன. இந்த முரட்டுத்தனமான வழிபாடு தலைப்பலி நவகண்டம் எனவும் அழைக்கப்படுகிறது.
தெய்வ வழிபாடு: அன்பின் மிகுதியால் தனக்கென வாழாது, தனது ஊரின், நாட்டின் நலனுக்காக தலையையோ, உடல் உறுப்புக்களை காணிக்கையாக தெய்வங்களுக்கு வழங்கும் வழக்கம் தமிழ் நாட்டில் தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது. அவ்வாறு உயர் நீத்த வீரர்களின் வம்சா வளியினருக்கு நிலம் தானமாக வழங்குவார்கள். இதனை உதிரப்பட்டி என்பர். இப்படி உயிர் காணிக்கை கொடுப்பவர்களை சாவான் சாமி, என தெய்வமாக வணங்குகிறார்கள். நாட்டிற்காக உயிர் விடுவதை அவிபலி, என தொல்காப்பியம் கூறுகிறது. நவகண்டம் பற்றிய தகவல்கள் சிலப்பதிகாரம்,கலிங்கத்துப்பரணி,தக்கயாகப்பரணி போன்ற நுால்களில் காணப்படுகின்றன.
அமைப்பு: நவகண்ட சிற்பங்கள் அமர்ந்த, நின்ற அல்லது முழங்காலிட்ட நிலையில் இருக்கும், வீரன் தனது ஒருகையை தலைமுடியை பற்றிக் கொண்டும்,மறுகையால் தலையை வாளால் வெட்டுவது போன்ற அமைப்பில் தான் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு சில சிற்பங்களில் வீரனின் ஒரு கையில் உள்ள வாள் கழுத்திலும், மற்றொரு வாள் நிலத்தில் குத்தி இருப்பது போன்று இருக்கும். வாளை வளைத்து பின்கழுத்தில் இரு கைகளாலும் வெட்டுவது போன்று சிற்பங்களும் கிடைத்துள்ளது.
சிற்பம்: செம்பிலான்குடியில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட சிற்பத்தில் மேலே கல்வெட்டும், நடுவில் வீரனின் புடைப்பு சிற்பமும், வீரனின் வலது கையில் உள்ள வாள் கழுத்தை அறுப்பது போலவும், இடது கையில் உள்ள குறுவாள் வயிற்றுப்பகுதியில் இருப்பது போல சிற்பம் அமைந்துள்ளது. 2.5 அடி உயரமுள்ள சிலை அழகிய ஆடை ஆபரணங்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
11ம் நுாற்றாண்டு: துங்கு தலை குடுத்தல் காளி கோயிலில் தான் நடக்கும். கோயில் அருகிலேயே சிற்பம் அமைக்கப்படும். இந்த ஊரில் காளி கோயில் இருந்து அழிந்து போயிருக்கலாம். அதன் பின்பு இந்த சிற்பம் சிவன் கோயில் பகுதிக்கு கொண்டு வந்திருக்கலாம். இந்த சிவன் கோயில் சோழர் கால கலை அமைப்பில் உள்ளது. சூரம்புலி, செம்பிலான்குடி, ஆகிய ஊர் பெயர்களும் சோழர்களை நினைவுபடுத்துகின்றன. இதில் உள்ள கல்வெட்டு தேய்ந்து படிக்கமுடியாத நிலையில் உள்ளது. இந்த எழுத்தமைதி கொண்டு பாண்டிய நாடு சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்த 11 ம் நுாற்றாண்டில் இந்த சிற்பம் அமைக்கப்பட்டிருக்கலாம். நவகண்டம் கொடுக்கும் பழக்கம் சோழ நாட்டுப்பகுதியில் அதிகமாக காணப்படுகிறது.பாண்டிய நாட்டுப்பகுதியில் இந்த வழக்கம் பெரிய அளவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது, இவ்வாறு அவர் கூறினார்.