பதிவு செய்த நாள்
20
டிச
2011
12:12
கடையநல்லூர் : சபரிமலை ஐயப்ப பக்தர்கள் முல்லைப் பெரியாறு பிரச்னையை அடுத்து சாம்பவர்வடகரை ஐயப்பன் கோயிலுக்கு வருகை தந்து நெய் அபிஷேகம் செய்து ஊருக்கு திரும்பினர். இக்கோயிலுக்கு நேற்று 500க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் வருகை தந்திருந்தனர். கடையநல்லூர் அருகேயுள்ள சாம்பவர்வடகரையில் சுவாமி ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இறைவழிபாட்டில் ஆண், பெண் பாகுபாடு கிடையாது. ஒவ்வொரு பக்தர்களும் தனது, தாய், தந்தை, மனைவி மக்களோடு 18 திருப்படிகள் ஏறிச் சென்று கருவறையில் அமர்ந்து அருள்புரியும் சுவாமியை வழிபடும் வகையில் உள்ளது. பெற்றோர்கள் தங்களது 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை சுவாமி ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்ய வைத்து வணங்குவது இக்கோயிலின் சிறப்பாகும். மாலை அணிந்த குருசாமிகள் சுவாமி ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்து வணங்கலாம். இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் ஒவ்வொரு தமிழ்மாத பிறப்பு அன்றும், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வழிபட செல்லும் பக்தர்கள் வரும் காலங்களிலும் அதிகளவில் வருவதுண்டு. இதனிடையில் தற்போது முல்லைப் பெரியாறு அணை விவகாரம் காரணமாக தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் பெருமளவில் ஆங்காங்கே பிரச்னைகளுக்கு ஆளாகி வருவதாக கூறப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள கேரள எல்கை பகுதிகளில் பெருமளவில் பதட்டமாக காணப்பட்டு வருவதால் செங்கோட்டை வழியாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்து வந்தது. இதனிடையில் நேற்று புளியரை செங்கோட்டை பகுதியில் பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் சாலை மறியல் காரணமாக ஆங்காங்கே நிறுத்தப்பட்ட நிலையில் கடையநல்லூர் அருகேயுள்ள சாம்பவர்வடகரை ஐயப்பன் கோயிலுக்கு ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் வரத் துவங்கினர்.நேற்று காலை 9 மணி முதல் சென்னை, திண்டுக்கல், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலையில் பூஜை செய்வதை போன்றே பூஜைகள் செய்து ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்துவிட்டு தங்கள் ஊருக்கு திரும்பி சென்றதை பரவலாக காணமுடிந்தது. நேற்று காலை முதல் மதியம் வரை 500க்கும் மேற்பட்ட தமிழகத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 18 படிகளுக்கு பூஜை செய்து, நெய் அபிஷேக வழிபாடு செய்து சென்றதால் சாம்பவர்வடகரை பகுதியில் ஏராளமான வாகனங்கள் சாரை, சாரையாக செங்கோட்டை, கோவிலாண்டனூர் வரை ஏராளமான வாகனங்கள் நின்றதை காண முடிந்தது.சபரிமலை ஐயப்பனை போன்றே சாம்பவர்வடகரை கோயிலும் பிரசித்தி பெற்று வருவதால் தமிழகத்தை சேர்ந்த பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.