பதிவு செய்த நாள்
20
டிச
2011
12:12
அவிநாசி : ""ஏழரை சனி பிடித்தால் கவலைப்படாதீர்; ஆஞ்சநேயரை தினமும் வழிபட்டால், மற்றதை அவர் பார்த்து கொள்வார், என்று திருச்சி கல்யாணராமன் பேசினார்.அவிநாசி பெரிய தேர் நிலையம் அருகிலுள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் திருப்பணி நன்கொடை நிகழ்ச்சிக்காக, கம்பராமாயண தொடர் சொற்பொழிவு வரும் 23ம் தேதி வரை நடக்கிறது."சீதா கல்யாணம் என்ற தலைப்பில் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது: எதற்கெடுத்தாலும் ஜாதகம் பார்க்க வேண்டுமென்று தொடர்ச்சியாக அலையாதீர். ஏழரை சனி பிடித்தால் பயப்படாதீர்; அவரும் ஒரு தெய்வம்தான். சனி பிடித்தால் ஆஞ்சநேயரை தினமும் வழிப்பட்டால், மற்றதை அவர் பார்த்துக் கொள்வார். குல தெய்வம், இஷ்ட தெய்வம், குருவை வணங்கினால் நன்மை உண்டாகும். தெய்வ பக்தியைவிட, குரு பக்தி மிகவும் முக்கியம். ராமாயணம் கேட்டால் எந்த பாவமும் பிடிக்காது. பலர் நன்றாக வாழ்வதற்கு சிலர் சிரமப்படுவர்; இது, உலக நியதி. "கஷ்டப் படுகிறேன் என்று உண்மை யான பக்தன் சொல்லக்கூடாது. பெரியவர்கள் சொல் பேச்சை கேட்டால் நல்லதே நடக்கும். காமம், கர்வம், கோபம், குரோதம், மதமாச்சர்யம் உள்ளிட்டவற்றை கைவிட்டால் நல்லது. மனைவி எப்போதுமே கணவனுக்கு வலது பாகம் மட்டுமே நிற்க வேண்டும். அது தான் சம்பிரதாயம். எனவே, மனைவிக்கு "இடம் கொடுக்கக்கூடாது. அப்படி என்றால், இடப்பாகத்தை கொடுக்கக் கூடாது என்று பொருள். உலகிலேயே மிகச் சிறந்த நண்பன் மனைவி மட்டுமே. ஏனென் றால், அவளுக்குத்தான் நம்மை பற்றி நன்றாக தெரியும். வரக்கூடிய ஆபத்துகளை சமயம் பார்த்து தீர்த்து வைப்பாள், என்றார். சொற்பொழிவை முருகநாதன் துவக்கி வைத்தார். ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோவில் திருப்பணி குழு நிர்வாகி ஈஸ்வரன் நன்றி கூறினார்.