சிதிலமடைந்த சிவன் கோயில் - சொட்டதட்டியில் சொக்கனுக்கு சோதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜன 2018 10:01
மதுரை : மதுரை கீழடி அருகே சொட்டதட்டியில் பழமையும், புராதன சிறப்பும் மிக்க சிதிலமடைந்த சிவன் கோயிலை சீரமைக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மதுரை அருகே தொல்லியல் துறையினர் சதுர்வேதி மங்களம் என்ற கொந்தகை மற்றும் அகழாய்வு நடத்திய கீழடி அருகே சொட்டதட்டியில் சிவன் கோயில் உள்ளது. பசு மாடு வளர்ப்பு, விவசாயம் குல தொழிலாக இருந்தது. லோகாம்பாள் பெயரில் கிராமத்தினர் பயன்படுத்திய நாழிக்கிணறு குடிநீர் ஆதாரமாக இருந்தது. அய்யனார் கோயில் எழுப்பி அனைத்து சமுதாயத்தினரும் வழிபட்டு வந்தனர்.சிவன் கோயில் கருங்கற்களால் கட்டப்பட்டது. கோபுரங்களில் கலைநயம் மிக்க சிலைகள் வடிக்கப்பட்டிருந்தன. கோயில் பூஜை பயன்பாட்டிற்கு ஒரு நாழிக்கிணறு இருந்தது. பிற்காலத்தில் அதை சுற்றி ஒரு குளம் அமைக்கப்பட்டது. தற்போது குளம் சிவ ஊருணி என அழைக்கப்படுகிறது. கோயிலை நிர்வகித்த பலர் இடம் பெயர்ந்ததால் பராமரிப்பு கேள்விக்குறியானது. கோயில் பிரகாரத்தில் அரச, வேப்ப மரம் முளைத்து கோபுரங்களை சிதலமடைய செய்தன.ஓய்வு ஏ.டி.எஸ்.பி., மோகன், முன்னாள் ராணுவ வீரர் கணேசன், ஓய்வு வி.ஏ.ஓ., முருகேசன் கூறியதாவது: பழமையான கோயில் சிதிலமடைவது வேதனையளிக்கிறது. கோயிலை புனரமைத்து, அனைத்து தரப்பினரும் வழிபாடு நடத்திட வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். கோயில் குறித்து தெரிந்தவர் 94430 25861 ல் தொடர்பு கொள்ளலாம், என்றனர்.