பதிவு செய்த நாள்
08
ஜன
2018
12:01
சூலுார்: சூலுார் அடுத்த கள்ளப்பாளையம் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவிலில், நாளை (௯ம் தேதி) அதிகாலை, 4:30 மணிக்கு, திருப்பாவையின், 25வது பாடலான, ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் எனத்துவங்கும் பாடலை பாடி, பக்தர்கள் பெருமாளை வழிபடுகின்றனர். சூலுார் அடுத்த பல்லடம்- செட்டிபாளையம் ரோட்டில் உள்ள, கள்ளப்பாளையத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில், நுாற்றாண்டுகளுக்கு மேல் பழமையானது. கோவில் வளாகத்தில், ராமர்- லட்சுமணர், சீதாதேவி, பிரம்மா- சரஸ்வதி, தன்வந்திரி, ஆழ்வார்கள், சக்கரத்தாழ்வார் மற்றும் ஆஞ்சநேயருக்கு தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளன. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. வைகுண்ட ஏகாதசியன்று வெளியூர், வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர்.
நுாறாண்டுகளுக்கு முன், இவ்வூர் பெரியவர்கள் துவக்கிய, ஸ்ரீ சீனிவாச பெருமாள் பஜனை கோஷ்டி, பக்தி சிரத்தையுடன் இறைவனுக்கு சேவையாற்றி வருவது சிறப்பம்சமாகும். திருமணத்தடை நீங்கவும், குழந்தை பேறு கிடைக்கவும் வேண்டி ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகின்றனர். இங்கு, நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, 24வது நாள் திருப்பாவை பாடலை பாடி மார்கழி பூஜை நடந்தது. நாளை அதிகாலை, 4:30 மணிக்கு, 25வது பாடலான, ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்... எனத்துவங்கும் திருப்பாவை பாடலை பக்தர்கள் பாடுகின்றனர். பகை அரசனால் சிறையில் இருந்த ஒருத்தியான தேவகிக்கு, நீ மகனாக பிறந்தாய். பிறந்த அதே இரவில், பெருவெள்ளம் உடைய யமுனை ஆற்றைக்கடந்து போய், ஆயர்பாடியில் உள்ள மற்றொருத்தியான யசோதைக்கு, மகனாய் மறைந்து வளர்ந்து வந்தாய். இதனையறிந்து, தீங்கு நினைத்த கம்சனின் எண்ணத்தை தவிடு பொடியாக்கி, அவனது வயிற்றிலே நெருப்பு பற்றி எரிவது போல் நின்றாய். உன்னை அன்போடு நினைத்து வந்தோம். நின் மேன்மையான செல்வத்தையும், வீரத்தையும் குறித்து பாடுவோம்; அதனால் வருத்தமும் தீர்ந்து மகிழ்வோம் என்பதே பாடலின் பொருளாகும்.