பதிவு செய்த நாள்
08
ஜன
2018
12:01
உடுமலை: கால்நடைகளின் காவல் தெய்வமான ஆல்கொண்டமால் கோவில் திருவிழாவையொட்டி, உடுமலை சுற்றுப்பகுதியில் உருவார பொம்மைகள் தயாரிப்பு பணியை, தொழிலாளர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.உடுமலை அருகே, சோமவாரபட்டியில் அமைந்துள்ள மால கோவில் என அழைக்கப்படும், ஆல்கொண்டமால் கோவிலை, கால்நடைகளின் காவல் தெய்வமாக சுற்று வட்டார மக்கள் வழிபட்டு வருகின்றனர். விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகள் நோய், நொடியின்றி ஆரோக்கியத்துடன் இருக்கவும், பால் உற்பத்தி பெருகவும், விவசாயம் செழிக்கவும், அமாவாசை உள்ளிட்ட பல்வேறு விசேஷ நாட்களில் மாட்டு வண்டிகளில் வந்து வழிபட்டுச்செல்கின்றனர். ஆண்டு முழுவதும் பொதுமக்கள் வழிபாடு நடத்தி வந்தாலும், பொங்கல் பண்டிகையையொட்டி நான்கு நாட்கள் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அப்போது, பொங்கல் மற்றும்மாட்டுப்பொங்கலன்று வீடுகளில் வளர்க்கும் கால்நடைகள் ஈனும் கன்றுகுட்டிகளை, ஆல்கொண்டமால் கோவிலுக்கு தானமாக வழங்கி வழிபடும் வழக்கம் இருந்து வருகிறது.
உருவார வழிபாடு: கால்நடைகள் நலமுடன் வாழவும், தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட அனைத்து வாயில்லா ஜீவன்களின் ஆரோக்கியத்துக்கு உருவார பொம்மைகளை வைத்து வழிபட்டு வருகின்றனர். அதன்படி, கோவில் பண்டிகைக்கு ஒருமாதம் முன்பிருந்து, சுற்றுப்பகுதியில் உருவார பொம்மைகள் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், கோவில் திருவிழாவுக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில் புக்குளம், சோமவாரப்பட்டி, பூளவாடி உள்ளிட்ட பகுதிகளில் உருவார பொம்மைகள் உற்பத்தியை தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.கோவிலில் வைத்து வழிபடுவதற்காக, பசு, காளை, ஆடு, கிளி, செம்மறியாடு, வேட்டைநாய்கள், கன்றுகள் பசுவிடம் பால் குடிப்பது போன்று பல்வேறு வடிவங்களில் பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன.
மட்டைகள் தட்டுப்பாடு: உருவார பொம்மைகள் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:பரம்பரை, பரம்பரையாக பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், உருவார பொம்மைகள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆல்கொண்டமால் கோவில் திருவிழாவுக்கு மட்டுமில்லாமல் சித்திரை, பங்குனி மாதங்களில் கருப்பராயன் உள்ளிட்ட எல்லை தெய்வங்கள் வழிபாட்டுக்கும் பொம்மைகள் செய்யப்படுகின்றன. ஆனால், ஆல்கொண்டமால் சீசனுக்கே அதிகளவிலான பொம்மைகள் செய்து விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
உருவார பொம்மைகள் அனைத்தும் கால், உடல், தலை என ஒவ்வொரு உறுப்பாக செய்து, கடைசியாக ஒட்டவைத்து இறுதி வடிவம் கொடுக்கப்படுகிறது. இதற்காக கொழுமம், கோதவாடி குளங்களில் இருந்து களிமண் எடுத்துவரப்பட்டு, அதனுடன் குதிரை சாணம் மற்றும் கம்பு மொட்டுகளை கலந்து பொம்மை செய்யும் பக்குவத்திற்கு மண் தயார் செய்யப்படுகிறது. நாளொன்றுக்கு குறைந்தபட்சம், 15 முதல் 20 பொம்மைகள் வரை செய்ய முடியும். அதனை, மூன்றுநாட்கள் வெயிலில் காயவைத்த பின், ஒருநாள் முழுவதும் சூளையில் வைத்து வேகவைக்கப்படுகிறது. சூளையில் இருந்து எடுக்கப்படும் பொம்மைகளுக்கு, முதலில் வெள்ளை சுண்ணாம்பு பூசி, பின் பல்வேறு வர்ணங்கள் பூசப்படுகிறது. ஒரு பொம்மை செய்வதற்கு குறைந்தபட்சம், 5 நாட்கள் வரை தேவைப்படுகிறது. ஒரு அடிக்குமேல் இருக்கும் பெரியளவிலான பொம்மைகள் என்றால் ஒருவாரம் முதல், 10 நாட்கள் வரை தேவைப்படும்.
வறட்சி உள்ளிட்ட காரணங்களால், பல ஏக்கரில் தென்னை மரங்கள் வெட்டப்பட்டுள்ளதால், சூளைகளுக்கு தேவையான மட்டைகள் கிடைப்பதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தென்னை மட்டைகளின் விலையும், பல மடங்கு வரை உயர்ந்துள்ளது. தேங்காய் மட்டை ஒன்று, இரண்டுரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒருஜோடி பொம்மைகள், பத்து ரூபாயில் இருந்து நுாறு ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர். தவிர்க்க வேண்டும் திருவிழாவின் போது, கோவிலில் பக்தர்கள் வைத்து வழிபாடு செய்யப்படும் பொம்மைகளை, வெளியில் விற்பனை செய்ய அனுமதிப்பதால், சுற்றுப்பகுதிகளில் இருந்து விற்பனைக்கு எடுத்து செல்லப்படும் பொம்மைகள் விற்பனை குறையும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், பொம்மை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டு நஷ்டத்தை சந்திக்கின்றனர். இதனால், பக்தர்கள் வழிபடும் பொம்மைகளை, விற்பனை செய்வதற்கு தடைவிதிக்க வேண்டும் என பொம்மை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.