பதிவு செய்த நாள்
08
ஜன
2018
12:01
புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து, சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள், பாதயாத்திரை சென்றனர். -உலக நன்மை வேண்டி, ஆண்டுதோறும் புதுச்சேரி லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்றம் சார்பில், ஜனவரி முதல் ஞாயிற்றுக்கிழமை, சிங்கிரி கோவிலுக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். அதன்படி, காந்தி வீதி, வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து நேற்று காலை 6:௦௦ மணிக்கு திருக்கோவிலூர் ஜீயர் சுவாமிகள், மங்களாசாஸனம் செய்து, பாதயாத்திரையை துவக்கி வைத்தார். ஆடிட்டர் பூவராகவன், லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., பங்கேற்றனர். உ.வே கிருஷ்ணன் சுவாமிகள் முன்னிலையில், குயவர்பாளையம் வணிக வைசிய ஹரிஹரி பஜனை கூடம் சார்பில், கிருஷ்ணர் ரதம், பாண்டுரங்க ரகுமாயி சுவாமி ரதம் புறப்பட்டு சென்றன. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையில் பங்கேற்றனர். சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலை சென்றடைந்ததும், சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம், பூஜைகள் நடந்தன. விழாவில், வில்லியனூர் கீழ் அக்கராவரம் பெரியாழ்வார் திருத்தொண்டு சபையின் பஜனை, சரண்யாவின் பக்தி இசை, திண்டிவனம் நம்மாழ்வார் சபை ஆஷா நாச்சியார், வெங்கடேசராமா ஜதாசர் ஆகியோரின் சொற்பொழிவு நடந்தது. ஏற்பாடுகளை, ஆன்மிக வழிபாட்டு மன்ற தலைவர் இளங்கோ, கவுரவ தலைவர் பக்தவச்சலம், ஆடிட்டர் பூவராகவன், பொருளாளர் வாசுதேவன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.