சபரிமலை: சபரிமலையில் அபிஷேகத்துக்கு கொண்டு வரும் நெய் சுத்தமானது என்பதை ஒவ்வொரு பக்தரும் உறுதி செய்ய வேண்டும் என்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு வேண்டுகோள் விடுத்துள்ளார். ”பக்தர்கள் இருமுடியில் கொண்டு வரும் பொருட்களில் நெய் மட்டுமே ஐயப்பனுக்கு எடுக்கப்படுகிறது. தேங்காயில் நிறைத்து கொண்டு வரும் நெய் சன்னிதானம் வந்ததும் உடைக்கப்பட்டு பாத்திரத்தில் ஊற்றி, அபிஷேக டிக்கெட் எடுத்து ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆனால் இதில் ஏராளம் பக்தர்கள் கொண்டு வருவது சுத்தமான நெய் அல்ல என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யும் நெய் சுத்தமானது என்பதை ஒவ்வொரு பக்தரும் உறுதி செய்ய வேண்டும். மெழுகு உள்ளிட்ட கலப்பட பொருட்கள் கலந்த நெய்யை வாங்காமல் சுத்தமான நெய் வாங்க வேண்டும். பக்தர்கள் இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.