பதிவு செய்த நாள்
09
ஜன
2018
12:01
மடத்துக்குளம் அருகே கே.டி.எல்., பகுதியிலுள்ள ஜக்கம்மாவுக்கு ஆடி 18 ம் தேதி சிறப்பு பூஜைகள் நடத்தி பக்தர்கள் வழிபடுகின்றனர். கடந்தகால வரலாற்றில், பலநுாறு ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த, ஒரு சமுதாயத்தின் முக்கிய கடவுளாக ஜக்கம்மா உள்ளது. வித்தியாசமான வழிபாட்டு முறைகள் நிறைந்த கடவுளாக உள்ள, இந்த அம்மனுக்கு மடத்துக்குளம் அருகே கே.டி.எல்.,மில் பகுதியில் கோவில் உள்ளது. தினசரி மக்கள் வழிபடுகின்றனர். வேப்பமரத்துக்கு கீழ், நடுகல்லில் திருநீறு, சந்தனம் குங்கும பொட்டு வைத்து வணங்குகின்றனர். பூக்களாலும் அலங்காரம் செய்யப்படுகிறது. சூலம் நிறுத்தப்பட்டு, அதில், எலுமிச்சம் பழங்கள் குத்தப்பட்டுள்ளன. சுவாமிக்கு மஞ்சள் நிறத்திலும், மரத்துக்கு சிவப்பு நிறத்திலும், துணி அணிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18 ம்தேதி அமராவதி ஆற்றிலிருந்து நீர் எடுத்து வரப்பட்டு, அபிேஷகம் நடக்கிறது. மக்கள் கூறுகையில், பலதலைமுறையாக இந்த வழிபாடு நடக்கிறது. தேசியநெடுஞ்சாலை ஓரத்திலிருந்து நடுகல்லை வழிபட்டு வந்தனர்.சிறிது காலத்துக்கு முன்பு, 50 மீட்டர் தள்ளி, வேப்பமரத்துக்கு கீழ் கோவில் அமைத்து அதற்குள் நடுகல் அமைக்கப்பட்டது. முன்பு மைவாடி பாளையக்காரர்களால், இங்கு வழிபாடு நடத்தப்பட்டதாக முன்னோர்கள் தெரிவிக்கின்றனர், என்றனர்.