பதிவு செய்த நாள்
21
டிச
2011
10:12
உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, அவற்றையே மனதில் கொண்டு வாழ்ந்தவர் அன்னை தெரசா. மேசிடோனியாவில் பிறந்து, அல்போனியாவில் வாழ்ந்த இவர், தனது 12வது வயதில் இறைப்பணியில் ஈடுபட உறுதிபூண்டார். 18 வயதானதும், வீட்டை விட்டு வெளியேறி, லொரேட்டோ சகோதரிகள் சபையில் சேர்ந்து, ஆங்கிலம் கற்பதற்காக அயர்லாந்து சென்று. அதன் பின்னர் மறைபணியை நிறைவேற்ற இந்தியா வந்தார். இந்த இடைபட்ட காலத்தில் இவரது மனதில் நிலைத்திருந்த பெற்றோர், உற்றார், உறவினர்களின் நினைவுகளை புறந்தள்ளினார். ""கலப்பையில் கை வைத்த பின்னர் திரும்பி பார்ப்பவன் எனக்கு ஏற்புடையவன் அல்ல, என்ற இயேசுவின் வார்த்தைகள் மட்டுமே இவர் மனதில் பிரதிபலித்துக் கொண்டிருந்தன.
கோல்கட்டாவில் கன்னியர் மடத்தில் தங்கியிருந்த தெரசாவிற்கு அங்குள்ள ஏழை எளிய மக்களின் நரக வேதனை மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அவர்களுக்காக தனது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தார். மடத்தின் கட்டுப்பாட்டில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, நீல கலரில் கரையிட்ட வெண்மை நிறத்திலான பருத்தி புடவையை தனது அடையாளமாக்கிக் கொண்டு அருட்பணியை துவக்கினார்.
தொழு நோயாளிகள், முதியவர்கள், அநாதைகளுக்கு உதவினார். தெருதெருவாக சென்று நன்கொடை பெற்று தெருவோர சிறுவர்கள் உடுத்துவதற்கு உடைகளை வழங்கினார். இதற்காக இவர் சந்தித்த இழிவுகள் சாதாரணமானதல்ல.
எல்லாவற்றையும் இறைவனுக்காக ஏற்றுக்கொண்டார். என்ன நேர்ந்தாலும் வெட்கப்பட மாட்டேன், வேதனையடைய மாட்டேன் என்ற இவரது மனஉறுதி கல் நெஞ்சக்காரர்களையும் கரையவைத்தது.இவரால் துவக்கப்பட்ட மிஷனரீஸ் ஆப் சேரிட்டி நிறுவனம் 123 நாடுகளில் 610 சேவை மையங்களுடன் செயல்படுகிறது. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அருட்சகோதரி, சகோதரர்களும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். எந்நிலையிலும் மனநிறைவோடு இருக்க கற்றுக்கொள்ளுங்கள் என்று தனது அருட்பணியாளர்களுக்கு உணர்த்திய அன்னை தெரசா, வறுமையிலும், வளமையிலும் தனக்கு வாழத்தெரியும் என்று நிரூபித்தவர். அவரை நினைவுகூறும் நாம், நம் வாழ்வுக்கு ஆணிவேரும், அடித்தளமுமாய் அன்பை அமைத்துக்கொள்வோம். இயேசு கிறிஸ்துவை நம் உள்ளங்களில் குடியமர்த்துவோம்.