பதிவு செய்த நாள்
21
டிச
2011
10:12
பழநி : பழநிக்கு பாதயாத்திரை பக்தர்கள் இப்போதே வர துவங்கி விட்டனர். ஜனவரி மாதத்தில் இதன் எண்ணிக்கை அதிகரித்து, தை பூசத்தின் போது உச்சத்தை தொடும். அதற்கு முன், பக்தர்களுக்கு போதிய வசதிகளை செய்ய வேண்டும். பழநி கோயில் தைப்பூச விழாவிற்கு, மதுரை, திருச்சி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை வருவர். இந்த ஆண்டுக்கான விழா, பிப்., 7 ல், நடைபெற உள்ளது. பிரச்னை ஏராளம்: திண்டுக்கல், மதுரை, கொழுமம், தாராபுரம் ரோடுகளில், ஆண்டுதோறும் பக்தர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். பாதயாத்திரை பக்தர்களுக்காக அகலப்படுத்தப்பட்ட ரோடு, சமீபத்திய மழையால் சேதம் அடைந்துள்ளது. நடுரோட்டில் பக்தர்கள் நடந்து செல்வதால், கடந்த காலங்களில் விபத்துகள் நடந்துள்ளன. இதை தவிர்க்க, ரோடுகளை சீரமைக்க வேண்டியது அவசியம்.
உவ்வே: இது தவிர, ரோடு ஓர கடைகளில், சுகாதாரமற்ற உணவு, அதிக விலைக்கு விற்கப்படுகிறது. பல ஓட்டல்களில் விலைப்பட்டியல் இல்லாமல், கூடுதல் வசூல் நடக்கிறது. தடை செய்யப்பட்ட பாலிதீன் உபயோகம் தாராளமாக உள்ளது. மலைக்கோயிலைச் சுற்றிலும், நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் உள்ளன. நகராட்சி, கோயில் நிர்வாகம், போலீசார் இதை கண்டுகொள்ளவில்லை. திருடர்களின் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. பஸ் ஸ்டாண்டில் டிரைவர்களின் விருப்பம்போல் பஸ்களை நிறுத்துவதால், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. கோயிலை சுற்றி சுகாதாரம் காக்கவும், பக்தர்களின் வசதி, பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், உணவுப் பொருட்களின் தரத்தை மேம்படுத்தவும், மாவட்ட நிர்வாகம் இப்போதே முயற்சி எடுக்க வேண்டும். அப்போது தான், பிரச்னைகள் இன்றி தைப்பூச விழாவை நடத்த முடியும். கலெக்டர் நாகராஜன் நடவடிக்கை எடுப்பாரா...