பதிவு செய்த நாள்
10
ஜன
2018
01:01
தர்மபுரி: மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தர்மபுரி அருகே அதியமான்கோட்டையில் உள்ள காலபைரவர் கோவிலில், நேற்று சிறப்பு பூஜை மற்றும் அபிேஷகம் நடந்தது. தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் தட்சணகாசி காலைபைரவர் கோவில் உள்ளது. தேய்பிறை அஷ்டமி நாட்களில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலத்தில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய இங்கு வந்து செல்கின்றனர். தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின், சாம்பல் பூசணியில் தீபம் ஏற்றி நேர்த்திகடன் செலுத்தினர். முன்னதாக, காலை, 6:00 மணிக்கு காலபைரவருக்கு அஷ்டபைரவ யாகம், அஷ்டலஷ்மி யாகம், தனகார்சன குபேரயாகம், அதிருந்ர யாகம் உள்ளிட்ட யாகங்கள் நடந்தன. தொடர்ந்து, 64 வகையான அபிேஷகங்கள், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள் நடந்தன. பின், மூலவருக்கு, தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று நள்ளிரவு, 12:00 மணிக்கு, 1,008 கிலோ மிளகாய் வற்றல் யாகம் நடந்தது. இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள காலபைரவருக்கு, சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் நடந்தது.