பதிவு செய்த நாள்
21
டிச
2011
10:12
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு அருகே பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட 500 ஆண்டு முந்தைய பெருமாள் கோயில், தனது வரலாற்று பதிவுகளை இழந்து, மண்ணோடு மண்ணாகுவது பக்தர்களை வேதனையடைய செய்துள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அர்ஜூனா நதிக்கரையில் உள்ளது அழகிய மனவாளப் பெருமாள் கோயில். இது இப்பகுதியை ஆண்ட மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்ற மன்னரால் உருவாக்கப்பட்டது. சைவ சமயத்தை மன்னர் வளர்த்த போதிலும், அதற்கு ஈடாக வைணவ மதத்தையும் போற்றி பாதுகாத்தார் என்பதற்கு இக்கோயில் ஒரு சான்றாக உள்ளது. இதை மெய்ப்பிக்கும் வகையில்,இதன் உள்ளே அழகிய கலைநயம் மிக்க சிற்பங்கள், தூண்களும் அமைந்துள்ளன. 10 ஏக்கர் பரப்பளவில், அதன் எதிரே உபன்யாச மண்டபம் அமைந்துள்ள இக்கோயிலுக்கு அர்ஜூனா நதியை கடந்து செல்ல வேண்டும் என்பதாலும், ஊரிலிருந்து 4 கி. மீ., தொலைவில் இருப்பதாலும், குறைவான பக்தர்களே சென்றுவந்தனர். அதுவும் படிப்படியாக குறைந்து முற்றிலுமாக நின்றது. நீண்ட ஆண்டுகளாக பராமரிப்பில்லாததால், உத்திரக்கற்களும், சுற்றுச்சுவர் கற்களும் பெயர்ந்து விழுந்தன. பக்கவாட்டு சுவர்களும் சரிந்தன. கோயில் கருவறை, கோபுரம் உட்பட அனைத்து பகுதிகளும் சிதைந்து புதர்மண்டிக்கிடக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் பக்தர்கள் சிலர், தாங்களால் முடிந்த அளவு சுத்தம் செய்தனர். இதனால் பக்தர்கள் வருகையும் அதிகரித்துள்ளது. ஆனாலும், கட்டுமானங்கள் எந்த பிடிமானம் இன்றி ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பிடிமானம் இல்லாத ஆபத்தான கட்டடங்களுக்குள் நின்று, உயிரை கையில் பிடித்தபடி பக்தர்கள் வழிபடுகின்றனர். பொதுவாக எந்த மூலை முடுக்குகளில் கோயில் இருந்தாலும், குறைந்தபட்சம் விசேஷ நாட்களையொட்டியாவது அதற்கு ஒரு விமோசனம் பிறக்கும். ஆனால் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோயிலுக்கு மட்டும், இன்றுவரை விசேஷ நாட்களிலும் கூட விமோசனம் பிறக்கவில்லை என்பதே பக்தர்களின் வேதனையாக உள்ளது.