பதிவு செய்த நாள்
21
டிச
2011
10:12
வத்திராயிருப்பு : "சதுரகிரி மலைக்கு பல்வேறு நகரங்களிலிருந்து நேரடியாக பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என,பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். "பூலோக கயிலை ஆக பக்தர்களால் கருதப்படும் சதுரகிரி மலைக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினம் ஏராளமான பக்தர்கள், சாதுக்கள் வருகின்றனர். அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும் வி÷Œஷ தினங்களிலும் பல்லாயிரக்கணக்கானோர் வருகின்றனர். இம்மலைக்கு செல்ல விருதுநகர், தேனி, மதுரை மாவட்டங்கள் வழியாக பாதைகள் இருந்தாலும், 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள தாணிப்பாறை வழியாகவே செல்கின்றனர். இங்கு செல்வதற்காக வெகு தொலைவிலிருந்து வரும் பக்தர்கள், கிருஷ்ணன் கோவில் , ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து, வத்திராயிருப்பு வருகின்றனர். அங்கிருந்து ஷேர் ஆட்டோ, மினிபஸ்களில் மலையடிவாரம் செல்ல வேண்டியுள்ளது. இப்படி பல இடங்களில் பஸ், ரயில், ஆட்டோ என மாறிமாறி இறங்கி, ஏறி வருவதால், மலையடிவாரம் வருவதற்குள் களைத்து விடுகின்றனர். இதற்குப்பின் அவர்கள் கோயிலை அடைய 8 கி.மீ., க்கு மேல் மலைப்பாதையில் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் இறைவனை தரிசிக்கும் ஆர்வத்தில் வரும் வயதான பக்தர்கள் கோயிலை அடைவதற்குள் படாதபாடு படுகின்றனர். சிலர் குறிப்பிட்ட தூரம் ஏறி, மேற்கொண்டு ஏறவும் முடியாமல், இறங்கவும் முடியாமல் நடுவழியிலேயே பரிதவிக்கின்றனர். மலையை பொறுத்தவரை, சிவபக்தர்களுக்கு முக்திதரும் இடமாக கருதப்படுகிறது. காசிக்கு செல்ல இயலாத பக்தர்கள், இங்கு இயற்கையாக எழுந்தருளிய சுந்தரமகாலிங்க சுவாமி, 18 சித்தர்களால் வணங்கப்பெற்ற சந்தனமகாலிங்க சுவாமி, அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சுந்தரமூர்த்தி சுவாமியை தரிசித்து செல்கின்றனர். அத்துடன் காசி தீர்த்தத்திற்கு இணையான "ஆகாயகங்கை தீர்த்தத்தையும் கேன்களில் பிடித்து செல்கின்றனர். இதனால், பக்தர்கள் இதை ஒரு புனிதயாத்திரையாக கருதி வருகின்றனர். எத்தனையோ புது வழித்தடங்களில் கூடுதல் பஸ்களை இயக்கும் அரசு, இங்குவரும் பக்தர்களின் சிரமங்களை போக்க, பல்வேறு நகரங்களிலிருந்து நேரடியாக மலையடிவாரத்திற்கு பஸ்களை இயக்க வேண்டும்.