பதிவு செய்த நாள்
15
ஜன
2018
01:01
சேலம்: சிறைத்துறை குடியிருப்பு வளாகத்தில், மின்னொளி வாலிபால் போட்டிக்கு, தடை விதித்துள்ளது, விளையாட்டு வீரர்களுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம், அஸ்தம்பட்டி, சிறைத்துறை குடியிருப்பு வளாகத்தில் முனீஸ்வரர் கோவில் பின்புறம், வாலிபால் கழகம் சார்பில் ஆடுகளம் உள்ளது. அங்கு, வாலிபால் வீரர்கள் தினமும் பயிற்சி பெறுவது; மாவட்ட, மண்டல, மாநில அளவில் போட்டி நடப்பது வழக்கம். தற்போது, இரவில் மின்னொளி வாலிபால் போட்டி நடத்த, சிறைத்துறை கண்காணிப்பாளர் ஆண்டாள், சமீபத்தில் தடை விதித்துள்ளார். இது, வாலிபால் வீரர்கள், ஆர்வலர்களுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தி, இருதரப்புக்கும் பனிப்போர் நடந்து வருகிறது. அதன் எதிரொலியாக, முனீஸ்வரர் கோவிலில், மின் இணைப்பு உள்ளிட்ட முறைகேடு நடப்பதாக, ஆதாரத்துடன், இந்துசமய அறநிலையத்துறைக்கு, புகார் சென்றுள்ளது.
இதுகுறித்து, கோவில் தக்கார் மாலா கூறியதாவது: கோவிலுக்கு முறையான மின்இணைப்பு கிடையாது. அர்ச்சகர் நியமிக்கப்படவில்லை. தற்போது, சிறை காவலர்களாக பணிபுரியும் அரசு ஊழியர்கள், பூசாரியாக பணியாற்றுவது, பணிவிதிக்கு முரணானது. உண்டியல் பணத்திலிருந்து, கடந்தாண்டு, 2.5 லட்சம் ரூபாய், நடப்பு திருவிழாவுக்கு, 2.6 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது போதாது என, தனியாக வசூலிக்கும் பணம் குறித்த கணக்கு, அறநிலையத்துறைக்கு தெரியப்படுத்துவதில்லை. வருவாய் அதிகரிப்பால், கோவிலை, இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவர முயற்சி மேற்கொண்டுள்ளோம். இதுகுறித்து, சிறைத்துறை டி.ஐ.ஜி., அறிவுடைநம்பிக்கு, கடிதம் மற்றும் நேரில் முறையிட்டு, கோவிலை ஒப்படைக்க கோரப்படும். இல்லாதபட்சத்தில், சட்டரீதியாக கோவிலை கையகப்படுத்த, அடுத்தகட்ட நடவடிக்கை தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.