பதிவு செய்த நாள்
16
ஜன
2018
02:01
புதுக்கோட்டை, பொங்கலையொட்டி, புதுக்கோட்டை மாவட்டம், செரியலுாரில் முதல் முறையாக, போர்காய் தேங்காய் போட்டி நடந்தது.பொங்கலுக்கு, ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது போல, தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும், ஏதாவது வித்தியாசமான போட்டிகளை நடத்தி வருகின்றனர். அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம், செரியலுார் உட்பட பல கிராமங்களில், தேங்காய்களால் மோதிக் கொள்ளும், ’போர்காய் தேங்காய்’ எனும் வித்தியாசமான போட்டி நடத்தப்பட்டு வருகிறது.எதிர் எதிர் திசையில் இருவர் தங்கள் கைகளில் உள்ள தேங்காய்களை, நேருக்கு நேராக மோதிக் கொள்வர். இதில் உடையும் தேங்காயை மோதி, உடைத்தவர் எடுத்துக் கொள்வார். இந்தப் மோதலுக்கான ஒரு போர்காய் தேங்காய், 300 - 500 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். ஒரே தேங்காயால், பல தேங்காய்களை உடைத்து செல்பவர்களும் உள்ளனர்.இந்த ஆண்டு செரியலுார் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் களம் அமைத்து, போர்காய் தேங்காய் போட்டியில் வெற்றி பெறும் தேங்காய்க்கு, 1,000 ரூபாய் பரிசும் அறிவித்திருந்தனர். நேற்று நடந்த போட்டியில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்டவர்கள் தேங்காய்களுடன் வந்து பதிவு செய்து போட்டியில் பங்கேற்றனர். குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. நான்கு சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியின் முடிவில், கீரமங்கலம் பாலு என்பவரின் தேங்காய், பல தேங்காய்களை மோதி உடைத்து முதல் இரண்டு பரிசுகளையும் வென்றது.