நாகர்கோவில்: தை அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜை நடத்தினர். நேற்று அதிகாலை முதலே ஏராளமானோர் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கூடினர். அவர்கள் கடலில் குளித்து ஈரத்துணியுடன் வேதவிற்பன்னர்கள் முன் அமர்ந்து பலி கர்மபூஜை நடத்தினர். பின்னர் முன்னோர்களுக்கான படையலை அவர்கள் கடலில் போட்டு குளித்து கடற்கரையில் உள்ள பரசுராம விநாயகர் கோயிலில் வணங்கினர். பின்னர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் கிழக்கு வாசல் வழியாக சென்று தேவியை வழிபட்டனர். பகவதி அம்மன் கோயில் கிழக்கு வாசல் ஆண்டுக்கு 5 முறை மட்டுமே திறக்கும். விஜயதசமி, பரிவேட்டை, திருக்கார்த்திகை, ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய 5 நாட்களில் மட்டும் கிழக்கு வாசல் திறக்கப்படுகிறது. தை அமாவாசையை முன்னிட்டு கடற்கரையிலும் கோயிலிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.