பதிவு செய்த நாள்
17
ஜன
2018
01:01
ஈரோடு: தை அமாவாசையை முன்னிட்டு, ஏராளமான மக்கள், காவிரிக்கரையில் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். ஈரோடு, கருங்கல்பாளையம் காவிரி கரையில், அமாவாசை நாளில், பலர் தர்ப்பணம் தருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். நேற்று சிறப்பு வாய்ந்த அமாவாசை என்பதால், ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். வழக்கமாக ராகவேந்திரர் கோவில் முன்புள்ள மண்டபம், காவிரிப்பாலம் அருகில் உள்ள விநாயகர் கோவில் முன்பும், தர்ப்பணம் கொடுப்பது வாடிக்கை. இப்பகுதிகளில் நேற்று இடமில்லாததால், சோழீஸ்வரர் கோவில் ரோட்டில் அமர்ந்து தர்ப்பணம் தந்தனர். ஆற்றில் படர்ந்து விரிந்திருந்த ஆகாயத் தாமரையால் பலர் தடுமாறினர்.
* தை முதல் ஆனி வரை, உத்ராயண புண்ணிய காலமாக கருதப்படுகிறது. மகர ராசியில் சூரியனுடன், சந்திரன் இணையும் நாளான, தை அமாவாசை தினமான நேற்று, பவானி கூடுதுறையில் அதிகாலை பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், புனித நீராடக் குவிந்தனர். பலர் முன்னோர்களுக்கு திதி, பிண்டம் விடுதல் உள்ளிட்ட காரியங்களில் ஈடுபட்டனர்.
* தை அமாவாசையை முன்னிட்டு, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்தனர். உச்சிக்கால பூஜைக்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. ஏராளமான பெண்கள், மிளகு கலந்த உப்பை, குண்டத்தின் மீது கொட்டி வழிபட்டனர். இதனால், திருக்கொடிகம்பம் அருகே குண்டத்தின் மீது, மலை போல் உப்பு குவிந்தது. மொத்தம், 5,000க்கும் மேற்பட்டோர் அம்மனை தரிசித்தனர். இதேபோல், பச்சமலை மற்றும் பவளமலை முருகன் கோவில்களில், பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
* பவானி காவிரி வீதியில், சின்ன கோவில் என அழைக்கப்படும் விசாலாட்சி உடனமர் காசிவிஸ்வநாதர் கோவில், செல்லியாண்டியம்மன் கோவில், வர்ணபுரம் மாரியம்மன் கோவில், எல்லையம்மன் கோவில் என அனைத்து கோவில்களிலும், சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. அம்மாபேட்டை காவிரி ஆற்றங்கரையோர ஈஸ்வரன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
* சென்னிமலை முருகன் கோவிலில், அதிகாலை, 4:30 மணிக்கே, கோவில் நடை திறக்கப்பட்டு, கோமாதா பூஜை நடந்தது. தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுப்ரமணிய சுவாமி ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கொடுமுடியில் குவிந்த பக்தர்கள்: கொடுமுடி காவிரிக் கரையில், அதிகாலை முதலே, பரிகார வழிபாடுகள் தொடங்கின. நூற்றுக்கணக்கான மக்கள் திதி கொடுத்தும், தர்ப்பணம் செய்தும், காவிரி ஆற்றில் பிண்டம் விட்டும் வழிபட்டனர். பலர் காகத்துக்கு உணவளித்தும், பசுவுக்கு அகத்திக்கீரை, பழமும் கொடுத்தனர். காவிரியில் புனித நீராடிய பின், மகுடேஸ்வரரை தரிசனம் செய்தனர். கோவில்களில் கூட்டம் அலைமோதல்: காணும் பொங்கல் விழா, தை அமாவாசையுடன் வந்ததால், கோவில்களில் கூட்டம் அலைமோதியது. இதனால் ஈரோடு பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், வீரப்பன்சத்திரம் மாரியம்மன், சூரம்பட்டி வலசு மாரியம்மன், கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர், கஸ்தூரி அரங்கநாதர் கோவில், கள்ளுக்கடை மேடு கொண்டத்து பத்தரகாளியம்மன், கோட்டை பத்ர காளியம்மன் கோவில்களில் கூட்டம் நிரம்பியது.
*சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரியம்மன் கோவிலில், 5,000த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். இதனால் தரிசனத்துக்கு பல மணி நேரமானது. ஈரோடு மட்டுமின்றி, திருப்பூர், கோவை மற்றும் கர்நாடக மாநில பக்தர்களும், அம்மனை தரிசிக்க குவிந்தனர்.