பதிவு செய்த நாள்
17
ஜன
2018
02:01
காளிப்பட்டி: கந்தசாமி கோவில் தேரோட்டத்துக்கு, இரு தேர்களை தயார்படுத்தும் பணி நடந்து வருகிறது. சேலம் அருகே, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், வரும், 27ல், தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஜன., 30ல் மூலவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடக்கும். அன்றிரவு, 12:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் முடிந்து, அதிகாலை சர்வ அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் கந்தசாமி தேருக்கு புறப்படுவார். மறுநாள், தேரோட்டம் நடக்கவுள்ளது. காலை, 6:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, சுவாமி தேரில் எழுந்தருள்வார். மதியம், 2:00 மணிக்கு, பக்தர்கள் வடம்பிடித்து, தேரை இழுத்துவருவர். பிப்., 1ல் சத்தாபரணம், பிப்., 3ல் வசந்த உற்சவத்துடன், விழா நிறைவடையும். இதையொட்டி, கோவில் முன் நிறுத்தப்பட்டுள்ள இரு தேர்களையும் சுத்தம் செய்து, முகூர்த்த கம்பம் நடப்பட்டு, சாரங்கள் மற்றும் வடசங்கிலி பொருத்தும் பணி நடந்து வருகிறது. ஏற்பாடுகளை, செயல் அலுவலர் சுதா, பரம்பரை அறங்காவலர் சரஸ்வதி ஆகியோர் செய்து வருகின்றனர்.