பதிவு செய்த நாள்
18
ஜன
2018
01:01
சேலம்: ராஜகணபதி கோவிலில், அபிஷேக கட்டணம் உயர்த்துவதற்கு, பக்தர்கள் போர்வையில், மளிகை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, மனு வழங்கினர். சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட், ராஜகணபதி கோவிலுக்கு வரும் பக்தர்கள், 100 ரூபாய் கட்டணம் செலுத்தினால், அபிஷேகம் செய்து கொள்ளலாம். தற்போது, அக்கட்டணத்தை, 2,500 ரூபாயாக உயர்த்த, அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஜகணபதி கோவில் பக்தர்கள் கூட்டமைப்பு பெயரில் சிலர், நேற்று, சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பின், அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: கோவிலில், பல ஆண்டுகளாக, 100 ரூபாய் கட்டணம் செலுத்தி அபிஷேகம் செய்து வந்தோம். நிர்வாகம், திடீரென கட்டணத்தை, 2,500 ரூபாயாக உயர்த்தியுள்ளது. சந்தன காப்புக்கு, 1,500ல் இருந்து, 3,000, வெள்ளி கவச சாத்து படிக்கு, 1,750ல் இருந்து, 3,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மக்கள் பாதிக்கப்படுவர். பழைய கட்டணத்தை வசூலிக்க வேண்டும் எனக்கோரி, மனு அளித்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர். உதவி ஆணையர் தமிழரசு கூறியதாவது: அபி?ஷகம் செய்வோர், அதற்கு தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும் அல்லது குருக்களிடம் பணம் கொடுக்க வேண்டும். அதை கணக்கிட்டு பார்த்துதான், 2,500 ரூபாயாக உயர்த்தியுள்ளோம். இதன்மூலம், அபிஷேகத்துக்கு தேவையான தேங்காய், பழம், அரிசி, வெல்லம், சுண்டல், மாலை, துண்டு போன்றவற்றை வழங்கிவிடுவோம். பொங்கல், சுண்டலை, வீட்டுக்கு எடுத்துச்செல்ல, தேவையான பாத்திரம் வழங்கப்படும். ஆனால், இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மனு அளிக்கின்றனர். அதையும் பரிசீலித்து, முடிவு எடுக்கப்படும்.
சந்தன காப்பு, வெள்ளி கவசம் சாத்துபடி போன்றவற்றுக்கு, ஏற்கனவே பக்தர்கள் செலவு செய்த தொகையே, தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாங்கள் எந்த கூட்டமைப்புக்கும் அனுமதி கொடுக்கவில்லை. பொருட்களை, ஒப்பந்த அடிப்படையில் வாங்கி, அதற்கான ரசீதை, அபி?ஷகம் செய்வோரின் பார்வைக்கு கொடுப்போம். இதனால், அங்கு கடை வைத்திருக்கும் வியாபாரிகள், தங்கம் வியாபாரம் பாதிக்கப்படும் எனும் நோக்கில், கூட்டமைப்பு பெயரில் மனு அளித்திருக்கலாம். இதுகுறித்து விசாரிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்.