பதிவு செய்த நாள்
19
ஜன
2018
12:01
உடுமலை: உடுமலையில், சலகெருதுகளுக்கும், சலகெருதாட்டத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கும் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. உடுமலை சுற்றுவட்டார கிராமங்களில், சலகெருது வழிபாடு பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொங்கல், மாட்டுப்பொங்கலுக்கு கால்நடைகள் ஈனும் காளை கன்றுகள் சலகெருதுகளாக அறிவிக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. சலகெருதுகளாக அறிவிக்கப்படும் காளைகள் கோவிலுக்கு வழங்கப்பட்டு, மூக்கணாங்கயிறு அணியாமல் ஊரை வலம்வரும்.
சலகெருதுகளுக்கு சிறப்பு பூஜை: திமிலுடன், திமிராக வளரும் சலகெருதுகள் மேய்ச்சலுக்காக மலைவாழ் மக்களிடம் கொடுக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மார்கழி மாதத்தின் துவக்கத்தில் சலகெருதுகள் கிராமங்களுக்கு அழைத்து வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. தொடர்ந்து பொங்கல் வரை ஒவ்வொரு கிராமத்திலும் வீடு, வீடாக அழைத்துச்சென்று பல்வேறு பூஜைகள் நடத்தப்படுகின்றன.வீடுகளுக்கு வரும் சலகெருதுகளின் கால்களில் மஞ்சள் தண்ணீர் ஊற்றி வழிபடுகின்றனர். தொடர்ந்து ஒவ்வொரு கிராமமாக அழைத்துச்செல்லப்பட்டு சலகெருதாட்டம் நடத்தப்படுகிறது. இதற்காக, இளைஞர்கள் விரதமிருந்து சலகெருது நடனம் மேற்கொள்கின்றனர்.
கிராமத்தின் பொது இடத்தில் சலகெருதுகளை விட்டு, கையில் குச்சிகளை பிடித்துக்கொண்டு, உருமி இசைக்கேற்ப நடனமாடி, அதனை தங்கள் வழிக்கு கொண்டு வருகின்றனர். இளைஞர்களின் நடனத்திற்கேற்ப சலகெருதுகளும் செல்கின்றன. அதன் தொடர்ச்சியாக, இரவில் இளைஞர்கள் தேவராட்டமும், பெண்கள் கும்மியாட்டமும் ஆடுகின்றனர். ஒருமாதம் முழுவதும் சலைகெருதாட்டம் கிராமங்களில் களைகட்டுகிறது. பொங்கல் முடிந்து சலகெருதுகள் மீண்டும் மேய்ச்சலுக்காக மலைகளில் விடப்படுகிறது. அதற்கு முன்பு, சலகெருதுகளுக்கு பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். சலகெருதாட்டத்தின்போது பயன்படுத்தப்படும் உருமி, மூங்கில்குச்சிகள் மற்றும் சலங்கைகளுக்கு பூஜைகள் நடத்தப்படுகின்றன. மூங்கில் குடுவையில் வேப்பிலை தண்ணீர் வைக்கப்பட்டு பொருட்களின்மேல் தெளிக்கப்படுகிறது. தட்டுகளில் வாழைப்பழம், எலுமிச்சை, வேப்பிலை மற்றும் பால் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நிலையில், உடுமலை சுற்றுவட்டாரத்தில் சலகெருதுகளுக்கு பொங்கல் வைத்து, வழியனுப்புவதற்கான சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.