பதிவு செய்த நாள்
19
ஜன
2018
01:01
பந்தலுார்: பந்தலுார் அருகே, கொளப்பள்ளி குறிஞ்சிநகர் முருகன் கோவிலில், நிரந்தர கொடி மரம் நடும் நிகழ்ச்சி நடந்தது.பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் பிரசித்தி பெற்றதும், உயரமான கோபுரங்களை கொண்டதுமான கோவிலாக, குறிஞ்சிநகர் முருகன்கோவில் அமைந்துள்ளது. கோவில் திருவிழா நடக்க உள்ளதையடுத்து, கோவிலில் நிரந்தர கொடி மரம் நடப்பட்டது. 31 அடி உயரமுள்ள தேக்கு மரத்தினாலான கொடி மரம் நடும் நிகழ்ச்சிக்கு கோவில் தர்மகர்த்தா சிங்காரம் தலைமை வகித்தார். கோவில் கமிட்டி தலைவர் தியாகராஜ், செயலாளர் கோவிந்தன், பொருளாளர்கள் அசோகன், நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, கொடி மரத்துக்கு கோவில் அர்ச்சகர் சக்திவேல் தலைமையிலான குழுவினர் பூஜைகள் செய்தனர்.
கோவில் நிர்வாகிகள் கூறுகையில்,வரும், 200 ஆண்டுகளுக்கு பின்னரே இந்த கொடி மரம் மாற்றப்படும். வரும் நாட்களில் நடக்கும் கோவில் சிறப்பு பூஜைகளிலும், ஆன்மிக நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்றனர். நிகழ்ச்சியில், முன்னாள் கவுன்சிலர் ரமேஷ், குறிஞ்சிநகர் மற்றும் கொளப்பள்ளி வியாபாரிகள் சங்கத்தினர், முன்னாள் கோவில் கமிட்டி நிர்வாகிகள், பொதுமக்கள், பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.