பதிவு செய்த நாள்
22
டிச
2011
12:12
ஆத்தூர்: ஆத்தூர், தாயுமானவர் தெரு திரவுபதி அம்மன் கோவிலில், சனிப் பெயர்ச்சியொட்டி வேள்வி பூஜை நடந்தது. சனீஸ்வரன் தங்கக்கவச சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று சனிப்பெயர்ச்சியையொட்டி, ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆத்தூர் தாயுமானவர் தெருவில், பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவிலில், நேற்று காலை 6 மணியளவில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வேள்வி பூஜை நடந்தது. தொடர்ந்து, நவகிரகத்தில் உள்ள சனீஸ்வரன் ஸ்வாமிக்கு தங்கக் கவசம் அணிவித்து, புஷ்ப சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின், சர்வ அலங்காரத்தில் சனீஸ்வரன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர், கைலாசநாதர், வெள்ளை விநாயகர் கோவில்களில், சனீஸ்வரன் ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை 10.40 மணியளவில், வெள்ளை விநாயகர் கோவில் சனீஸ்வரன் ஸ்வாமிக்கு, ஆத்தூர் தொகுதி மாஜி எம்.எல்.ஏ., சுந்தரம் சிறப்பு வழிபாடு செய்து, அர்ச்சனை செய்தார். சிறப்பு பூஜையில், ஆத்தூர், தலைவாசல், நரசிங்கபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.