பதிவு செய்த நாள்
22
டிச
2011
12:12
ஆத்தூர்: ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு, பொது நலச்சங்கம் வளர்ச்சி நிதி என, கட்டணம் வசூல் செய்வதால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆத்தூர் வசிஷ்ட நதிக்கரையின் கோட்டை பகுதியில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காயநிர்மலேஸ்வரர், பிரசன் வெங்கடேச பெருமாள் கோவில் மற்றும் கெட்டிமுதலி கோட்டையும் உள்ளன. காயநிர்மலேஸ்வரர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியில் பைரவர் பூஜை, பிரதோஷம், திருக்கல்யாணம், ஏகாதசி, சனிப்பெயர்ச்சி, குருபெயர்ச்சி, திருவிளக்கு பூஜைகள் நடத்தப்படுகிறது. அதையொட்டி, ஆத்தூர் பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனம், செருப்புகளுக்கு கட்டணம் வசூலிக்க, ஹிந்து அறநிலையத்துறை மற்றும் ஆத்தூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று சனிப்பெயர்ச்சியொட்டி ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் கோவிலுக்கு வந்தனர். அவர்களிடம், 5 ரூபாய் ரசீது கொடுத்து, கட்டாய வசூல் வேட்டை நடத்தினர். அதில், கோவில் கோபுரத்துடன், ஆத்தூர் கோட்டை பொது நலச்சங்கம், கோட்டை வளர்ச்சி நிதி என குறிப்பிடப்பட்டுள்ளது. தவிர, வசூலிப்பர் பெயர், அனுமதி விபரம் எதுவும் இல்லை. கூடுதல் கட்டணம் வசூல் செய்வது குறித்து பக்தர்கள் கேட்டால், வாகனங்களை நிறுத்தக் கூடாது என்று, ரசீது கொடுக்கும் நபர்கள் விரட்டியடிக்கின்றனர். இதுப்பற்றி ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம், பொதுமக்கள் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சங்கர் கூறுகையில், ""கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு, கட்டணம் வசூல் செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. பொது நலச்சங்கம் பெயரில் வசூல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீஸில் புகார் செய்யப்படும், என்று கூறினார்.