சூரியனார்கோவிலில் சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22டிச 2011 12:12
கும்பகோணம்: சூரியனார்கோவிலில் நேற்று காலை சனிபகவானுக்கு நடந்த சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கும்பகோணம் அருகே உள்ள சூரியனார்கோவிலில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான உஷாதேவி, பிரத்யுஷாதேவி உடனாய சிவசூரியபெருமான் கோவில் உள்ளது. நவக்கிரகங்களுக்கென்று அமைந்துள்ள ஒரே கோவிலாக உள்ளது. இங்கு ஒவ்வொரு கிரகத்தின் பெயர்ச்சியின்போது சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுவது சிறப்பு அம்சமாகும். நேற்று காலை 7.51 மணிக்கு கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சி அடைவதையடுத்து, நேற்று காலை ஆறு மணிக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. பின் தனிசன்னதி கொண்டுள்ள சனிபகவானுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. பின் ஹோமத்திலிருந்து கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கட அபிஷேகம் நடந்தது. சனிபகவானுக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு புஷ்பலங்காரம் செய்யப்பட்டது. காலை 7.51 மணிக்கு சிறப்பு மகா தீபாராதனை நடந்தது. இதில் திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமிகோவில் கட்டளை தம்பிரான் சுவாமிகள் மீனாட்சி சுந்தரத்தம்பிரான் பங்கேற்று, முன்னிலை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கண்ணன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சனிபகவானை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீனம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் ஆலோசனையின்படி கண்காணிப்பாளர் குருமூர்த்தி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.