பதிவு செய்த நாள்
22
ஜன
2018
02:01
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசுவாமி கோவிலில், வரும் தைப்பூசத்தன்று நடைபெற இருந்த தேரோட்ட திருவிழா, நான்குவழிச்சாலை பணி காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசுவாமி கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இக்கோவில்புரவிபாளையம் ஜமீன்தாரால் கட்டப்பட்டு,நிர்வகிக்கப்பட்டு வந்தது. பிற்பாடு, இந்து அறநிலையத்துறைகட்டுப்பாட்டுக்குவந்தது. இக்கோவிலில், மாதாந்திர கிருத்திகை, சஷ்டி மற்றும் மார்கழி மாத சிறப்பு பூஜை,கந்த சஷ்டி போன்ற விழாக்களும், ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று மூன்று நாட்கள் தேரோட்ட திருவிழாவும் நடப்பது வழக்கமாகும்.
கடந்தாண்டு பொள்ளாச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்ட, ரோடு விரிவாக்க பணிகள் துவங்கியது. இதில், கிணத்துக்கடவில் மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது. இப்பணி காரணமாக கடந்தாண்டு தைப்பூச தேரோட்ட விழா நிறுத்தி வைக்கப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டும் கோவில் முன்புறம் கான்கிரீட் துாண்கள் அமைக்கப்பட்டு ரோடு குறுகலாக இருப்பதால், தேரோட்டம் நடத்துவது இயலாது என்று முடிவு செய்யப்பட்டு, வரும்ஜன., 31ல், நடக்க இருந்த தைப்பூச தேரோட்ட திருவிழா நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும், தைப்பூசத்தன்று வேலாயுதசுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் செய்யப்படுகிறது. பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என செயல் அலுவலர் கந்தசாமி மற்றும் பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோபண்ண மன்றாடியார் ஆகியோர் தெரிவித்தனர்.