பதிவு செய்த நாள்
23
டிச
2011
10:12
ஈடு இணையில்லாத நற்பண்புகளை தன்னகத்தே கொண்டவர் புனித சூசையப்பர். இறைமகன் இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தையாக இறைகுலத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். மன்னன் தாவீதின் பரம்பரையில் தோன்றிய சூசையப்பர், நசரேத்தில் பிறந்து ஜெருசலேமில் வசித்தார். சிறுவயதிலேயே பிறருக்காக ஜெபிப்பதிலும் மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் நாட்டம் கொண்டிருந்தார். தேவதூதர்களின் உதவியோடு, அவரை அடையாளம் கண்டுகொண்ட இறைபணியாளர்கள் கன்னிமரியாளுக்கு மணமுடித்து வைத்தனர். அப்போது அசரீரி ஒலித்தது."" எனது ஊழியனாகிய சூசையப்பரே! இன்று முதல் மரியாள் உனக்கு மனைவியாயிருப்பாள். அவள் மீது மிகுந்த பக்தி சிரத்தையோடு நடந்து கொள். ஏனெனில், அவள் எனக்கு மகா பிரியமானவள். நீதியுள்ளவள். உடலிலும், ஞான அறிவிலும் புனிதமானவள். அவள் சொல்வதை செய்வாயாக என்று தெரிவிக்கப்பட்டது. அன்று முதல், மரியாளை வணக்கத்திற்குரிய பெண்மணியாக கருதிய சூசையப்பர், அவருக்கு பணிவிடை செய்வதில் மகிழ்ச்சியடைந்தார். இறைமகன் இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்காக, மரியாளை பெத்லகேமுக்கு சூசையப்பர் அழைத்து சென்றபோது, எண்ணற்ற துயரங்களை தாங்கிக் கொண்டார்.
தங்குவதற்கு இடம் கிடைக்காமல் அலைந்து திரிந்தபோதும், உணவிற்காக பரிதவித்தபோதும், குளிர் தாங்கமுடியாமல் துடித்தபோதும் இறைவனை நிந்திக்காமல் அவரை புகழ்ந்து பாடுவதிலேயே கவனம் செலுத்தினார். குழந்தை இயேசுவை, நெஞ்சோடு அணைக்கும் பாக்கியம் பெற்ற அவர், பிறந்த பலனை முழுமையாக அடைந்ததாக பெருமிதம் கொண்டார். தச்சுத்தொழில் செய்து கிடைத்த வருவாயில் மரியாளுக்கும், இயேசுவிற்கும் உணவளித்தார். தனது உயிர் பிரியப்போகும் தருணத்தை உணர்ந்த சூசையப்பர் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்ததற்காகவும், மீட்பரின் வளர்ப்பு தந்தையாக தேர்ந்தெடுத்ததற்காகவும் கடவுளுக்கு நன்றி செலுத்தினார். மரியாளை அழைத்து அவர் வருந்தும்படி ஏதாவது செய்திருந்தால், மன்னிக்குமாறு வேண்டினார். சிறுவன் இயேசுவை வணங்குவதற்காக முழந்தாளிட்ட நிலையில் குனிய முற்பட்டபோது, அவரை தடுத்த இயேசு தனது கரங்களில் தாங்கிக்கொள்ள, உயிர்மூச்சை துறந்து மனிதரில் புனிதராக மாறினார் சூசையப்பர். ஐம்புலன்களை அடக்கி ஆளநினைப்பவர்களுக்கு சூசையப்பர் பாதுகாவலராகவும், அமைதியான இறப்பிற்கு உத்தரவாதம் அளிப்பவராகவும், குழந்தை இல்லாதவர்களின் துயரத்தை நீக்குபவராகவும், தேவையற்ற அச்சத்தை வேரறுப்பவராகவும் வரமளிக்கிறார். அவரைப் போல் நாமும் தூய்மை பெற வேண்டுமானால், மன உறுதியோடு இறைவனை தேடுவோம்.