பதிவு செய்த நாள்
25
ஜன
2018
12:01
சேலம்: சேலம், சுகவனேஸ்வரர் கோவில் புதிய தேரில், ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சேலத்தில், பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவில் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பயன்பாட்டில் இருந்த தேர் பழுதடைந்தது. பின்னர், 45 லட்சம் ரூபாய் செலவில், புதிய தேர் செய்ய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி தேர் செய்யப்பட்டது. பணி நிறைவு பெற்று, கடந்த, 22ல் வெள்ளோட்டம் விடப்பட்டது. தற்போது, தேரடி வீதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தேரில், ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து, அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் கூறியதாவது: சுகவனேஸ்வரர் கோவில் புதிய தேர் செய்வதற்கு, தரமான மரம் பயன்படுத்தப்படவில்லை. இதனால், பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் தமிழரசு கூறியதாவது: தேர் செய்வதற்கு, தரமான மரம் பயன்படுத்தப்பட்டது. தேர், 30 டன் எடை கொண்டது. தற்போது ஒரு இடத்தில் மட்டுமே, பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. வெள்ளோட்டம் விடும் போது, சாலைகள் குண்டும், குழியுமாக இருந்தது. அதில் இறங்கிய போது, பக்தர்களால் இழுக்க முடியவில்லை. எனவே, ஜே.சி.பி., இயந்திரம் மூலம் இழுக்கப்பட்டது. அதனால் விரிசல் ஏற்பட்டுள்ளது. இன்று சரிசெய்து விடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.