பதிவு செய்த நாள்
25
ஜன
2018
01:01
திருவொற்றியூர்: முக்கால் நுாற்றாண்டுகளுக்கு பின் துவங்கி, ஒரே ஒருமுறை மட்டுமே தேரோட்டம் நடந்த நிலையில், மெட்ரோ ரயில் மேம்பால பணி காரணமாக, இந்த ஆண்டு, மாசி பிரம்மோற்சவத்தின் போது, திருவொற்றியூர், தியாகராஜர் சுவாமி கோவில் தேரோட்டம் நடக்குமா என, பக்தர்கள் குழப்பத்தில் உள்ளனர். திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. பிரசித்தி பெற்ற ஸ்தலம் என்பதால், தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள், இங்கு வந்து செல்வர்.
விழாக்காலங்களில், கடல் போல் கூட்டம் கூடும். இக்கோவிலில், 1941க்கு பின், தேர் இல்லாததால், தேரோட்டம் நடக்கவில்லை. மாடவீதி உலாக்களுடன், மாசி பிரம்மோற்சவம் முடிவுக்கு வரும். விமரிசையாக கோவிலுக்கென, தனித்தேர் செய்து, மாடவீதிகளில் தேரோட்டம் நடக்க வேண்டும் என, பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர். கோரிக்கை நிறைவேறும் விதமாக, 75 ஆண்டுகளுக்கு பின், 2015ல், இந்து சமய அறநிலையத் துறையின் நிதி, 25 லட்சம் ரூபாய், கோவில் நிதி, 15 லட்சம் ரூபாய், பொதுமக்கள் நிதி, 6 லட்சம் ரூபாய் என, மொத்தம், 46 லட்சம் ரூபாய் செலவில், கோவிலுக்கு தனித்தேர் செய்யப்பட்டது. கடந்த, 2015ல், வெள்ளோட்டம் பார்க்கப்பட்ட, பிரமாண்ட தேரை காண, பல்லாயிரக்கணக்கான மக்கள், திருவொற்றியூரில் குவிந்தனர். பின், 2016, 2017ல், மாசி பிரம்மோற்சவத்தின் போது, தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது.
கேள்விக்குறி: முக்கால் நுாற்றாண்டுகளாக, தேரோட்டம் காணாத, மாட வீதிகளில், பிரமாண்டமாக, ஆடி, அசைந்து வரும், தேரைப்பார்த்து பக்தர்கள் ஆனந்தமாகினர். தேர், கோவிலின் முன் இருந்து புறப்பட்டு, சன்னதி தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தெற்கு மாடவீதி, மேற்கு மாடவீதி, வடக்கு மாடவீதி சுற்றி, மீண்டும், திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக வந்து, சன்னதி தெருவை அடையும். நெடுஞ்சாலையில், மெட்ரோ ரயில் பணிக்காக, மேம்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. மேம்பாலம், தரைமட்டத்தில் இருந்து, 7 - 13 மீட்டர் உயரத்தில் அமையும் என, கூறப்படுகிறது. சாலையின் நடுவே, மேம்பாலத்திற்கு துாண் அமைக்கப்படுவதால், திருவொற்றியூர் நெடுஞ்சாலை, 3.5 மீட்டர் என்ற விகிதத்தில், இரண்டாக பிரியும். தவிர்த்து, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள, தபால் நிலையம் அருகே, மெட்ரோ ரயில் நிலையம் அமைய இருப்பதாகவும் தெரிகிறது. மெட்ரோ ரயிலின் இந்த பணிகளால், 41 அடி உயரம் கொண்ட பிரமாண்ட தேர், நெடுஞ்சாலை வழியாக சென்று, சன்னதி தெருவுக்குள் வருவது, கேள்விக்குறியாக உள்ளது. கோவில் நிர்வாகத்தினர், முன்கூட்டியே சுதாரித்து, தேரோட்டம் பாதிக்காத வகையில், மெட்ரோ ரயில் மேம்பால பணிகளை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு வலியுறுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. அதே நேரத்தில், மாற்று ஏற்பாடுகள் மூலம், தேரோட்டம் நடப்பதற்கான சாத்தியக்கூறுகளையும், தற்போதே ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அகலம் தான் இடிக்கும்!: தியாகராஜ சுவாமி கோவிலில், 75 ஆண்டுகளுக்கு பின், தேரோட்டம் கண்டு மகிழ்ச்சி அடைந்தோம். அந்த மகிழ்ச்சி, இரண்டு ஆண்டுகள் கூட, முழுமையாக நீடிக்கவில்லை. அதற்குள், திருவொற்றியூருக்குள், மெட்ரோ ரயில் மேம்பாலம் அமைக்கும் பணி, வேகமாக நடந்து வருகிறது. அகலம் தான் இடிக்கும் என, தெரிகிறது. தேரின் அகலம், 4.5 மீட்டர், நெடுஞ்சாலை இரண்டாக பிரிப்பதால், ஒரு பக்க சாலை, 3.5 மீட்டர் அளவிற்கு சுருங்கும். எனவே, தேர் திரும்புவதில் சிக்கல் ஏற்படும் என, தெரிகிறது. அதிகாரிகள் கவனித்து, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். 2018ம் ஆண்டுடன் நின்று விடாமல், 2019லிலும், தேரோட்டம் நடக்க வேண்டும்.
தேரோட்டம் நடக்கும்: மாசி பிரம்மோற்சவத்திற்காக, இரண்டு மாதங்கள் வரை, மெட்ரோ ரயில் பணிகளை நிறுத்த வேண்டும் என, கோவில் தரப்பில் கடிதம் கொடுத்து உள்ளோம். மேலும், தேர் ஓட, 30 முதல், 35 அடி அகல சாலை இருந்தாலே, பக்தர்களோடு தேர் செல்ல முடியும். தேரின் அடி பாக அகலம், 20 அடி வரை இருப்பதால், நிச்சயம் தேர் ஓடும். மேலும், மெட்ரோ ரயில் பாலத்திற்கான துாண் அமைக்கப்பட்ட பின், சாலை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், பிரச்னை இருக்காது. தேரின் உயரம் பாலத்தில் இடிக்கும் சூழல் வந்தால், தேரின் உயரத்தை, 5 அடி வரை குறைக்கலாம் என, முடிவு செய்யப்பட்டு உள்ளது. கோவில் நிர்வாக அதிகாரி