பதிவு செய்த நாள்
29
ஜன
2018
10:01
பழநி:பழநி தைப்பூச விழாவை முன்னிட்டு, மலைக் கோவிலில் இன்று முதல் பிப்., 2 வரை, தங்க ரத புறப்பாடு கிடையாது. பெரியநாயகியம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம் நடக்கிறது.தைப்பூச விழாவை முன்னிட்டு, பழநி பெரிய நாயகியம்மன் கோவிலில், ஜன., 25 முதல் பிப்., 3 வரை நடக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், பாத யாத்திரையாக வருகின்றனர்.
இவர்கள் அலகு குத்தியும், மலர்க் காவடி, மயில் காவடி, பால் குடங்கள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.தைப்பூச விழாவில், முத்துகுமார சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி காமதேனு, ஆட்டுகிடா, யானை வாகனங்களில் திருவுலா வருகிறார். முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நாளைஇரவு, 8:00 மணிக்கு பெரிய நாயகியம்மன் கோவிலில் நடக்கிறது.இரவு, 9:30 மணிக்கு வெள்ளி ரதத்தில் முத்துகுமார சுவாமி வள்ளி, தெய்வானையுடன் திருவுலா நடக்கிறது. நாளை மறுநாள் தைப்பூசத்தை முன்னிட்டு, மலை கோவிலில், அதிகாலை, 4:00 மணிக்கு சன்னதி நடை திறக்கப்படுகிறது.
பெரியநாயகியம்மன் கோவிலில், காலை, 10:00 மணிக்கு தேரோட்டம் ஆரம்பமாகி, நான்கு ரத வீதிகளில், தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. மலைக் கோவிலில், பக்தர்கள் கூட்டம் காரணமாக, வழக்கமாக இரவு, 7:00 மணிக்கு நடைபெறும் தங்க ரதத்தில் சின்னக்குமார சுவாமி புறப்பாடு, இன்று முதல் பிப்., 2 வரை கிடையாது. பிப்., 3ல், பெரியநாயகியம்மன் கோவில் அருகே தெப்பக்குளத்தில் தெப்போற்சவ விழா நடக்கிறது.