பதிவு செய்த நாள்
29
ஜன
2018
11:01
அம்பத்துார் : வெற்றிவேல் முருகனுக்கு, அரோகரா என்ற பக்தர்களின் பக்தி கோஷத்துடன், பிரசன்ன சுப்ர மணிய சுவாமி கோவிலில், நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
சென்னை, அம்பத்துார் ஒரகடம் அருகே, வெங்கடேஸ்வரா நகர், பிரதான சாலையில், தென்முக கடவுளான, பிரசன்ன சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. அங்குள்ள தட்சிணாமூர்த்தி, காலபைரவர், லட்சுமி ஹயக்ரீவர் ஆகிய மும்மூர்த்திகளுடன், ஸ்ரீமஹாவள்ளி தேவசேனா உடனுறை பிரசன்ன சுப்ர மணிய சுவாமிக்கு, நேற்று காலை, 9:00 மணி முதல், 10:30 மணி வரை, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. சிவாகம வாசஸ்பதி சண்முக சுந்தர சிவம், சிவ சுந்தர சிவம் ஆகியோர், கும்பாபிஷேக சிறப்பு பூஜைகளை செய்தனர். அதைத்தொடர்ந்து, கோபுர விமானங்களுக்கு நன்னீராட்டு நடந்தது. அப்போது, பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என பக்திப்பரவசத்துடன் கோஷமிட்டனர். பக்தர்கள் மீது மங்கள நீர் தெளிக்கப்பட்டது. அம்பத்துார், ஒரகடம், புதுார், கொரட்டூர் சுற்று வட்டாரங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர். மாலை, 6:00 மணி முதல், 7:30 மணிக்குள், பிரசன்ன சுப்ரமணிய சுவாமிக்கு, திருக்கல்யாண வைபவம்; 8:00 மணிக்கு, திருவீதி உலா நடந்தது. இன்று முதல், த்ரிபட்சயஜனம் எனும், மண்டலாபிஷேக பூஜை, 41 நாட்கள் நடைபெறும். விழா ஏற்பாடுகளை, ஸ்ரீவெங்கடேஸ்வரா நகர் பக்த ஜன சபாவினர் செய்தனர்.