பதிவு செய்த நாள்
30
ஜன
2018
12:01
சென்னை: ஹிந்து ஆன்மிக கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று, திருப்பதி தேவஸ்தானம் சார்பில், ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடந்தது. ஹிந்து ஆன்மிக சேவை மையம், பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளை ஆகியவை இணைந்து, ஒன்பதாவது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியை நடத்தியது.
இது, வேளச்சேரி, குருநானக் கல்லுாரியில், ஜன., 24ம் தேதி முதல், ஆறு பண்புகளை வலியுறுத்தும் வகையில் நடத்தப்பட்டது. இதில், சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த, ஒரு லட்சம் மாணவர்களுக்கு, பாரம்பரியத்தை நினைவூட்டும் விதமாக, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. கண்காட்சியில் தினமும், கேரளா மற்றும் கர்நாடகா மாநில கலைகள், சைவ ஆதீனங்களின் மடாதிபதிகள் நடத்தி வைத்த, வள்ளி - முருகன் திருமணம், கலை நிகழ்ச்சிகள், சேவையாட்டம், தெருக்கூத்து போன்றவை நடைபெற்றன. ஐந்து நாட்கள் நடந்த இந்த கண்காட்சியை, லட்சக்கணக்கானோர் பார்வையிட்டனர். கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று, ’ஜீவராசிகளைப் பேணுதல்’ என்ற தலைப்பில், நிகழ்வுகள் நடைபெற்றன. இதில், 1,008 மாணவ - மாணவியர் பங்கேற்று, கோ, கஜ, துளசி வந்தனம் செய்தனர். நேற்று மாலை, திருப்பதி தேவஸ்தானம் சார்பில், ’ஸ்ரீனிவாச கல்யாணம்’ நடைபெற்றது. நேற்றைய நிகழ்ச்சிகளில், தமிழக ஜீயர்கள், வைணவ அறிஞர்கள் மற்றும் ஆன்மிக சொற்பொழிவாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.