பதிவு செய்த நாள்
31
ஜன
2018
02:01
ஊத்துக்கோட்டை: பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், பக்தர்கள், 80 நாள்களில், காணிக்கையாக செலுத்திய பணம், 7 லட்சம் ரூபாய் இருந்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்தது. ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ளது சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில். இக்கோவில் சிவாலயங்களில் பிரதோஷ விழா கொண்டாட மூலக்காரணம் என, கூறப்படுகிறது. இங்கு, ஒவ்வொரு மாதமும் இரண்டு பிரதோஷ விழாக்களும், கார்த்திகை மாத விழா, அன்னாபிஷேகம், சிவராத்திரி உட்பட விசேஷங்களும் இங்கு கொண்டாடப்படுகின்றன. சிவன் கோவில்களில், சிவபெருமான் லிங்க ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆனால் இங்கு உருவ ரூபத்தில் ஆலகால விஷத்தை உண்ட மயக்கத்தில் அன்னை பார்வதி தேவி மடி மீது தலை வைத்து உறங்குவது போன்ற ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இங்கு மற்ற கோவில்களில் உள்ளது போன்று தட்சணாமூர்த்தி தனியாக நின்ற கோலத்தில் இல்லாமல், தனது மனைவி கவுரியை அணைத்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வால்மீகி முனிவர் தவம் செய்ததால், இங்கு சுவாமி வால்மிகீஸ்வரர் என, அழைக்கப்படுகிறார். மேலும், ராமபிரான் வழிபட்ட ராமலிங்கேஸ்வரரும், இங்கு அருள்பாலிக்கிறார். பல சிறப்புகளை கொண்ட இந்த கோவிலுக்கு, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சுவாமியை தரிசனம் செய்வர். இங்கு வரும் பக்தர்கள், தங்களது நேர்த்திக் கடனை செலுத்த, கோவில் வளாகத்தில், 13 உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த உண்டியலில் உள்ள பணம் எண்ணும் பணி நேற்று நடந்தது. கோவில் அறங்காவல் குழு தலைவர் திருநீலகண்டன் தலைமையில், கோவில் செயல் அலுவலர் முனிசேகர் மற்றும் சித்துார் மாவட்ட கோவில்களின் ஆய்வாளர் பனிராஜசயனா முன்னிலையில் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், 7 லட்சம் ரூபாய் இருந்தது. இது, 80 நாட்களில் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தியது என கோவில் நிர்வாகம் தெரிவித்தது.