பதிவு செய்த நாள்
01
பிப்
2018
11:02
நாகப்பட்டினம்: வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் கோவிலில், கிரகணநேரத்தில் நடை திறக்கப்பட்டு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நாகை மாவட்டம், வேதாரண்யத்தில், பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருமறைக்காடார் எனும், வேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
சமயக்குரவர்கள் மூவரால் பாடல் பெற்றதும், சப்த விடங்கலில் இரண்டாவது தல மான இக்கோவிலில், கிரகணத்தை முன்னிட்டு, நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் கண்ணுக்கு தெரிகின்றன. கிரகண தோஷத்தினால் ஏற்படும் பாதிப்புகள் கண்ணுக்கு தெரியாமல் உடல் ரீதியாகவும், பாவம் எனும் ஆன்மிக ரீதியாகவும் விளையும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனால், கிரகணத்தை முன்னிட்டு, நேற்று தமிழகத்தில் உள்ள கோவில்கள் நடை அடைக்கப்பட்டன. இந்நிலையில், கிரகணகாலத்தில் தெய்வ சக்தி அதிகரிக்கிறது என்ற ஐதீகத்தில், திருமறைக்காடார் எனும் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை வழக்கம் போல் நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின், ரிஷப வாகனத்தில், உற்சவர் சிவபெருமான், பார்வதி தேவியுடன் எழுந்தருளி, இரவு 7.00 மணிக்கு, கோவிலில் இருந்து புறப்பட்டு, வீதியுலா சென்று, சன்னதி கடலில் தீர்த்தவாரி நடந்தது. திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.