பதிவு செய்த நாள்
24
டிச
2011
10:12
பழநியின் மையப்பகுதியில், பழைய தாராபுரம் ரோட்டில் அமைந்துள்ளது, சி.எஸ்.ஐ., இம்மானுவேல் ஆலயம். இது, 137 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 1835 ல், லாரன்ஸ், வார்டு என்ற இரு ஆங்கிலேய மிஷனரிகள் பழநிக்கு வந்தனர். இந்த ஆலயம் உள்ள இடத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்து, இவ்வாலயம் உருவாக காரணமாக இருந்தனர். அதன் பின், 11 ஆண்டுகளில், அதே இடத்தில், இந்த ஆலயம் மிகப்பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டது. அந்த ஆலயத்தினை ஆங்கிலேய மிஷனரிகள் கட்டிய நிலையில், எந்த ஒரு பெயர்களும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், 1873 ம் ஆண்டு என்பதற்கான கல்வெட்டு மட்டும் உள்ளது. இதன் அடிப்படையில் பழநி சி.எஸ்.ஐ., இம்மானுவேல் ஆலயம் 137 ஆண்டு தொன்மை வாய்ந்த பழங்கால கட்டடம் என்பது உறுதி செய்யப்படுகிறது. இதன் முதல் இந்திய "உபதேசியராக வேதமுத்து நிர்வாகம் செய்துள்ளார். அதன் பின் மிஷனரி எல்வுட் 1892 ம் ஆண்டிலும், அதன் பின், மிஷனரியாக வேக்மென் என்பவரும் பழநி வந்துள்ளனர். பழமையான இந்த தேவாலயம், தற்போது விரிவாக்கப்பட்டு பெரிதான வளர்ச்சி அடைந்து, நம் நகரின் மையப் பகுதியில் உள்ளது. இங்கு, 250 க்கும் மேற்பட்ட குடும்பங்கள், இத்திருச்சபையின் உறுப்பினர்களாக உள்ளனர். கடவுள், மனிதர்களை பாவங்களில் இருந்து மீட்க கிறிஸ்துமஸ் நாளில், இப்பூவுலகில், கிறிஸ்துவாக பிறந்தார். பாவிகளை ரட்சித்தார். இந்நற்செய்தியை அறிவிக்கும் பெட்டகமாக, இந்த தேவாலயம் திகழ்கின்றது. இந்த ஆலயத்தில் அனைத்து மதத்தினரும், ஜெபித்து சமாதானம், மகிழ்ச்சி பெற்று வருகின்றனர். இயேசுவின் நாமத்தில், பழநி சி.எஸ்.ஐ.,இம்மானுவேல் தேவாலய திருச்சபை மக்கள் சார்பில், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.