பதிவு செய்த நாள்
01
பிப்
2018
03:02
திருப்பூர் : சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட, திருப்பூர் சுற்றுவட்டார பகுதி முருகன் கோவில்களில், "அரோகரா கோஷம் முழங்க, தைப்பூசத்தேரோட்டம், நேற்று கோலாகலமாக நடந்தது. காங்கயம் சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூசத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை, சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் என, பல்வேறு திரவியங்களில், மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், சிறப்பு அலங் காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினார். நேற்று காலை, 10:42 மணிக்கு, தேர் வடம் பிடிக்கப்பட்டது; "அரோகரா கோஷம் விண்ணதிர, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில், தேர் அசைந்தாடி வந்தது. 200 மீட்டர் தூரம் தேர் இழுக்கப்பட்டு, பின்னர் நிலை நிறுத்தப்பட்டது.
சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி, தீர்த்தக்குடம் எடுத்து வந்தும், சுவாமியை வழிபட்டனர். தைப்பூசத்தை முன்னிட்டு, கிரி வல பாதையில் பக்தர்கள் வெள்ளம், கடைகள் என்று, விழாக்கோலம் இன்றும், நாளையும் தேரோட்டம் நடக்கிறது. ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசுவாமி கோவிலில், நேற்று அதிகாலை சுவாமிக்கு மகா அபிஷேகம் நடந்தது. பம்பை, உடுக்கை உள்ளிட்ட வாத்தியங்கள் இசைக்க, அதிர்வேட்டு முழங்க, சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள், திருத்தேரை வடம் பிடித்து இழுந்தனர். நாளை மறுநாள், மலைத்தேரோட்டம் நடக்கிறது. கருமத்தம்பட்டி விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில், மலைக் கோவில் குழந்தை வேலாயுதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி திருமுருக நாதசுவாமி கோவில், கொங்கணகிரி கந்த பெருமான் கோவில், அலகுமலை முத்துக்குமார சுவாமி கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், வாலிபாளையம் முருகன் கோவில், திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில், தைப்பூசத்தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சந்திர கிரகணம் என்பதால், வழக்கமாக மாலையில் நடைபெறும் தேரோட்டம், நேற்று காலையில் நடந்தது. சந்திர கிரகணம் முடிந்ததும், இரவு பரிகார சாந்தி பூஜைகள் நடந்தன.