பதிவு செய்த நாள்
01
பிப்
2018
03:02
கோவை : கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் தைப்பூச தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. தைப்பூசத்தை முன்னிட்டு கோவை கோட்டை மேடு ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோவிலில் நேற்று காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. பின்னர், அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளினார். பேரூர் ஆதீனம் இளையபட்டம் மருதாசல அடிகள், கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜமாணிக்கம் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். தேர், ஈஸ்வரன் கோவில் வீதி, பெருமாள் கோவில் வீதி, உக்கடம் என்.எச்.ரோடு, டவுன்ஹால், பெரியகடைவீதி வழியாக மீண்டும் மதியம் 11:40 மணியளவில் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடந்தது.
தேரோட்டத்தை முன்னிட்டு காலை 9:00 மணி முதல் மதியம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மாநகராட்சி போலீஸ் கமிஷனர் பெரியய்யா தலைமையில், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை, சிறப்பு காவல் படை என, 700 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேருக்கு முன் பாதுகாப்புக்காக சுழலும் கேமரா பொருத்திய போலீஸ்வாகனம் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் சென்றன. இவ்விழாவில்,பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., அம்மன்அர்ஜூனன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசித்தனர்.