வழுதாவூர் கயிலாயநாதர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2018 03:02
வழுதாவூர் : வழுதாவூர், மேட்டுவெளி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆதி கயிலாயநாதர் தியான கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா நேற்று நடந்தது. இதனையொட்டி, கடந்த 29ம் தேதி காலை 9:00 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு நடந்தது. மாலை 4:00 மணிக்கு ஐங்கரப் பெருமாள் வேள்வி, மாலை 6:30 மணிக்கு முதற்கால வேள்வி நடந்தது. நேற்று முன்தினம் (30ம் தேதி) காலை 10:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி துவங்கியது. மாலை 4:30 மணிக்கு ஆதி கயிலாயநாதர் விமான கலசம் நிறுவுதல், மாலை 5:30 மணிக்கு மூன்றாம் கால வேள்வி மற்றும் சிறப்பு மூலிகைப் பொருட்கள், வாசனைப் பொருட்களை கொண்டு வேள்வி நடந்தது. முக்கிய நிகழ்வாக, நேற்று காலை 6:00 மணிக்கு திருச்சுற்று கலச நீராட்டு, காலை 9:00 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடு நடந்தது. காலை 9:15 மணிக்கு ஆதிகயிலாயநாதர் கருவறை விமான கலசத்திற்கு புனித நீராட்டு, காலை 9:45 மணிக்கு ஆதிகயிலாயநாதருக்கு திருக்குட நன்னீராட்டு நடந்தது. ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.