திருப்புத்துார்:திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் திருக்கல்யாண மகோற்ஸவத்தை முன்னிட்டு பெருமாள் -ஆண்டாள் திருக்கல்யாணம் நாளை இரவு நடைபெறுகிறது. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தை மாதம் பவுணர்ணமியை அடுத்து மூன்றாம் திருநாளில் ஆண்டாளுக்கும் பெருமாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். அதை முன்னிட்டு ஐந்து நாள் மகோற்ஸவம்நடைபெறும். ஜன.,29ல் உற்சவம் துவங்கியது. நேற்று காலை ஆண்டாள் தைலக்காப்பு மண்டபம் எழுந்தருளினார். மதியம் 2:00மணி அளவில் ஆண்டாளுக்கு தைலம் சாத்தி, நவகலச அலங்கார சவுரித் திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து உச்சிக்கொண்டை சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஆண்டாள் அருள்பாலித்தார். மணவாளமாமுனிகள் கைத்தடியில் எழுந்தருளினார். பின் சந்திரகிரகணத்தை முன்னிட்டு கோயில் நடை சாத்தப்பட்டது. இன்று மாலை 5:30 மணிக்கு ஆண்டாள் தைலக்காப்பு மண்டபம் எழுந்தருளலும், தொடர்ந்து முத்துக்குறி பார்த்தலும் நடைபெறும். நாளை காலை பெரியாழ்வார் திருக்கல்யாண மண்டபத்தில் பெருமாளை எதிர் கொண்டு அழைத்தலும், மாலையில் சீர்வரிசை மங்கள பொருட்கள் திருவீதி உலா, ஊஞ்சல் மாலை மாற்றுதல் நடைபெறும். இரவு 7:16 மணிக்கு மேல் 8:10 மணிக்குள் பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். தொடர்ந்து மணமக்கள் திருவீதி புறப்பாடு நடைபெறும்.