பதிவு செய்த நாள்
03
பிப்
2018
01:02
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் கட்டப்பட்டு வரும் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் கும்பாபிஷேகம் ஏப்ரல் இறுதியில் நடக்கும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் ஐந்தரை ஏக்கர் பரப்பளவில் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் கட்டப்பட்டு வருகிறது.
வெங்கடாஜலபதி மூலஸ்தானம் அமைக்கப்பட்ட பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி, பத்மாவதி தாயார், ஆண்டாள், அம்பாள் சன்னதிகள் அமைக்கப்பட்டன. தற்போது கொடிமரம், அன்னதான மண்டபம், இலவச திருமண மண்டபம், முடி காணிக்கை செலுத்தும் இடம், கார் பார்க்கிங், தெப்பக்குளம், கோயில் அலுவலகம் ஆகியவை கட்டும் பணி நடக்கிறது.திருப்பதியில் நடைபெறுவது போலவே இங்கும் பிரம்மோற்ஸவம் உள்ளிட்ட விழாக்கள் நடத்தும் வகையில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. பிரம்மோற்ஸவ நேரத்தில் ஏழுமலையானின் பாதத்தில் சூரிய ஒளி விழும் வகையில் கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொடி மரத்துக்கான தேக்கு மரம் மங்களூருவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்த பணிகளை திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயற்பொறியாளர்கள் ராதாகிருஷ்ண ரெட்டி, ஜெயச்சந்திரா, தொழில்நுட்ப அதிகாரி வெங்கடராமராஜா ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள், ’பணிகள் விரைவாக நடக்கிறது. ஏப்ரல் இறுதிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும்,’ என்று தெரிவித்தனர்.