பதிவு செய்த நாள்
03
பிப்
2018
12:02
மாமல்லபுரம்:ஸ்தலசயன பெருமாள் கோவிலில், திருப்பணிகள் மேற்கொள்ள, தொல்லியல் அறிஞர்கள் ஆய்வு செய்தனர். மாமல்லபுரத்தில், 108 வைணவ கோவில்களில், 63வது ஸ்தலசயன பெருமாள் கோவில் விளங்குகிறது. ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார் உள்ளிட்டோர் வீற்றுள்ள கோவிலில், 1998ம் ஆண்டு நடத்தப்பட்ட கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து, மீண்டும் நடைபெறாமல் தாமதமாகிறது. இதுகுறித்து, நம் நாளிதழில், தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்ட நிலையில், அறநிலையத் துறை இணை ஆணையர் கே.பி.அசோக்குமார், திருப்பணிகள் மேற்கொள்வது குறித்து, 29ம் தேதி ஆய்வு செய்தார். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், தொல்லியல் அறிஞர்களுடன் இயங்கும் கோவில்கள் புனரமைப்புக் குழு ஆலோசனையின்படி, பழமை மாறாமல் புதுப்பிக்க முடிவெடுக்கப் பட்டது.
தொடர்ந்து நேற்று, தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர், எஸ்.செல்வராஜ் மற்றும் முன்னாள் கண்காணிப்பாளர் கோ.அர்ச்சுணன், கோவில் செயல் அலுவலர் எஸ்.சங்கருடன், ஆய்வு செய்தனர்.இது குறித்து, அறநிலையத்துறையிடம் அறிக்கை அளித்து, திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து பரிந்துரைப்பர். அதற்கேற்ப, துறை மதிப்பீடு, ஒப்புதல் பெற்று, திருப்பணி மேற்கொள்ள உள்ளதாக, செயல் அலுவலர் சங்கர் தெரிவித்தார்.