பதிவு செய்த நாள்
03
பிப்
2018
01:02
லக்னோ: உ.பி.,யில், டி.ஜி.பி., அந்தஸ்தில் உள்ள, ஐ.பி.எஸ்., அதிகாரி, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, பகிரங்க ஆதரவு தெரிவித்து உள்ளார். உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். சமீபத்தில், இம்மாநிலத்தின் லக்னோ நகரில், ராமர் கோவில் கட்டுவது தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில், டி.ஜி.பி., அந்தஸ்தில் உள்ள, ஐ.பி.எஸ்., அதிகாரி, சூர்ய குமார் சுக்லா பங்கேற்றார். அப்போது, ராமர் கோவிலை விரைவில் கட்ட ஆதரவு தெரிவிப்பதாக, சூர்ய குமார் சுக்லா உறுதிமொழி ஏற்ற வீடியோ, சமூக தளங்களில், காட்டுத் தீ போல் பரவுகிறது.அந்த வீடியோவில், ’ராமர் பக்தர்களாகிய நாம், ராமர் கோவிலை விரைவில் கட்டி முடிக்க, முழு ஆதரவு அளிப்பதென உறுதி கூறுகிறோம்; ஜெய் ஸ்ரீராம்’ என, சூர்ய குமார் கூறியுள்ளார். அவருடன் சேர்ந்து, ஏராளமானோர் உறுதிமொழி ஏற்றனர்.
இது குறித்து, சூர்ய குமார் கூறுகையில், ”நல்லிணக்க சூழலை ஏற்படுத்தும் நோக்கில், உறுதி மொழி எடுத்தேன். இதில், தவறேதும் இல்லை. உறுதி மொழி எடுத்த வீடியோவில், சில காட்சிகள், உள்நோக்கத்துடன் திருத்தப்பட்டு உள்ளன. என் கருத்தை தவறாக திரித்து காட்டியுள்ளனர்,” என்றார்.சூர்ய குமாரின் செயலுக்கு, சமாஜ்வாதி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சி செய்தித் தொடர்பாளர், ராஜேந்திர சவுத்ரி கூறுகையில், ”ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கான விதிகளை, சூர்ய குமார் மீறியுள்ளார். மக்களுக்கு சேவையாற்றும் பணியில் அவர் உள்ளார். பொது நிகழ்ச்சியில், இத்தகைய உறுதிமொழியை அவர் ஏற்றது தவறு,” என்றார்.