பதிவு செய்த நாள்
06
பிப்
2018
01:02
தஞ்சாவூர்: கும்பகோணத்தை அடுத்த, திருமங்கைச்சேரி வரதராஜபெருமாள் கோவிலில், வெள்ளி பொருட்கள் மாயமான வழக்கில், போலீஸ் கஸ்டடி எடுக்கப்பட்ட, பந்தநல்லூர் கோவில் தலைமை எழுத்தர் கொடுத்த தகவலின் அடிப்படையில், போலி நடராஜர் சிலையை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றினர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, திருமங்கைச்சேரியில், வரதராஜபெருமாள் கோவில் சுவாமிக்கு அணிவிப்பதற்காக, 1984ம் ஆண்டு, 53 வெள்ளி பொருட்கள், ஆபரணங்கள் தானமாக வழங்கப்பட்டது. இக்கோவிலில் போதிய பாதுகாப்பு இல்லாததால், வெள்ளி பொருட்களை பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலில் ஒப்படைத்தனர். இந்நிலையில், வரதராஜ பெருமாள் கோவில் வெள்ளி ஆபரணங்களை சரிபார்க்க வேண்டும் என, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம், உபயதாரர்கள் புகார் அளித்தனர். அதன்படி, சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன். மாணிக்கவேல், கடந்த ஜனவரி மாதம் ஆய்வு செய்தார். அப்போது, 53 வெள்ளி பொருட்களில், 37 வெள்ளி பொருட்கள் காணவில்லை என்பது தெரிந்தது. இதைத் தொடர்ந்து, பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலில் சிலைகள் மாயமான வழக்கில், கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்ட, தலைமை எழுத்தர், ராஜாவை, கஸ்டடி எடுத்து, சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல், நேரடியாக விசாரணை நடத்தினார். விசாரணையில், பந்தநல்லூர் கோவிலில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியில், பித்தளையால் ஆன ஒருஅடி உயரமுள்ள, நடராஜர் சிலை ஒன்று வைத்திருப்பதை, ராஜா ஒப்புக் கொண்டுள்ளார். அதை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். கோவிலில் உண்மையான நடராஜர் சிலையும் இருக்கையில், எதற்காக அங்கு போலி பித்தளை நடராஜர் சிலை மறைத்து வைக்கப்பட்டது என, சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.