பதிவு செய்த நாள்
07
பிப்
2018
11:02
ஆமதாபாத் : குஜராத்தில், 500 ஆண்டுகள் பழமையான, அனுமார் கோவிலை, ஒரு முஸ்லிம் தன் சொந்த செலவில் புதுப்பித்து வருகிறார். குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாவட்டம், மிர்ஜாப்பூர் பகுதியில், அனுமார் கோவில் ஒன்று உள்ளது; 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவில், மிகவும் சிதிலமடைந்திருந்தது. மிர்ஜாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர், மோயின் மேமன், ௪௩; கட்டட கான்ட்ராக்டர். தினமும், அனுமார் கோவில் வழியாக செல்லும் மேமனுக்கு, அந்த கோவிலை சீரமைக்க வேண்டும் என, ஆசை ஏற்பட்டது. இது பற்றி, கோவில் அர்ச்சகர், ராஜேஷ் பட்டிடம் தெரிவித்தார். அவர் சம்மதித்ததை அடுத்து, கோவிலை புதுப்பிக்கும் பணியை, மேமன் துவக்கி உள்ளார்.
இது பற்றி, மேமன் கூறியதாவது: நான் தினமும், ஐந்து வேளை தவறாமல், தொழுகை செய்பவன். சிறு வயது முதலே, இந்த கோவிலை பார்த்து வருகிறேன். இந்த கோவிலின் சிதிலமடைந்த நிலையை பார்த்து, மிகவும் வருந்தினேன். இந்த கோவிலை, என் சொந்த செலவில் புதுப்பிக்க முடிவு செய்து, அர்ச்சகரிடம் பேசினேன். அவரும் சம்மதித்தார். பணிகள், இன்னும் ஒரு வாரத்தில் முடிந்து விடும். கோவில் பின்புற சுவரில், மற்ற கோவில்களில் உள்ளதை போல், காவி நிற, ’டைல்ஸ்’ ஒட்ட முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். கோவில் அர்ச்சகர், ராஜேஷ் பட், ”இந்தியாவில் நிலவும் சகோதரத்துவம், சமூக ஒற்றுமைக்கு, இதுவே சரியான உதாரணம்,” என்றார்.