பதிவு செய்த நாள்
08
பிப்
2018
04:02
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து சம்பவத்துக்கு பின், கடைகளை காலி செய்ய விதிக்கப்பட்ட கெடு, நேற்று மாலை, 6:00 மணியுடன் முடிந்தது. எனினும், ’மாற்று இடம் வழங்கும் வரை, கடைகளை காலி செய்ய இயலாது’ என, கடை உரிமையாளர்கள் அடம் பிடிக்கின்றனர். மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களுக்கு கீழ், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி உள்ளிட்ட பகுதிகளில், 115 கடைகள் செயல்பட்டன. ஆயிரங்கால் மண்டபம் அருகே, வீர வசந்தராய மண்டபம் பகுதியில் மட்டும், 86 கடைகள் இருந்தன. இங்கு கடை எண், 75, 76 ல் ஏற்பட்ட தீ விபத்தால், வீர வசந்தராய மண்டபம் இடிந்து விழுந்தது.
பயங்கர தீ விபத்துக்கு காரணமான கடைகளை அகற்றக்கோரி, பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. தீ விபத்து சம்பவத்துக்கு பின், அம்மன் சன்னதியில், 20 பூக்கடைகளுக்கு மட்டும் கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியது. விபத்து நடக்காத பகுதிகளில், வழக்கம் போல் கடைகளை நடத்த அனுமதிக்கக்கோரி, கோவில் நிர்வாகத்திடம் கடை நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். காலி செய்ய இறுதி கெடு: மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில், கடை உரிமையாளர்களின் சங்கத் தலைவர் ராஜநாகுலு தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. அவர்களிடம் கோவில் இணை கமிஷனர் நடராஜன் கூறியதாவது: கடைக்காரர்களுக்கு மாற்று இடம் வழங்க, எனக்கு அதிகாரம் இல்லை. நீங்கள் மேல் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்க வேண்டும். கோவில் பாதுகாப்பு கருதி, கடைகளை காலி செய்யக்கோரி, கோவில் நிர்வாகம் சார்பில் பல முறை, ’நோட்டீஸ்’ அனுப்பப்பட்டு விட்டது. இனியும் காலதாமதம் செய்ய வேண்டாம். எனவே, மாலை, 6:00 மணிக்குள் சுவாமி சன்னதி பகுதியில் தீ விபத்து கடைகளை தவிர்த்து, ஏனைய அனைத்து கடைகளையும் காலி செய்யுங்கள். தாமதித்தால் கடைகளால் தான், தீ விபத்து ஏற்பட்டது என, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அவர் எச்சரிக்கை விடுத்தார்.காலக்கெடு முடிந்த பிறகும், கடைகளை காலி செய்யவில்லை. கடைகளை காலி செய்ய கால அவகாசம், மாற்று இடம் வழங்கக்கோரி, நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக கடைக்காரர்கள் தெரிவித்தனர்.